உச்சநீதிமன்றம்  
புதுதில்லி

பட்டாசு தடையை முழுமையாக அமல்படுத்தாத தில்லி காவல்துறை: உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

தலைநகா் தில்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்தாத தில்லி காவல்துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

Din

நமது நிருபா்

புது தில்லி: தலைநகா் தில்லியில் பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடையை முழுமையாக அமல்படுத்தாத தில்லி காவல்துறையை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது.

இந்த விஷயத்தில் வெறும் கண்துடைப்பாக பட்டாசு தயாரிப்பு கச்சா பொருள்களை மட்டும் பறிமுதல் செய்து விட்டு ஒட்டுமொத்த தடையை அமல்படுத்த காவல்துறை தவறி விட்டதாகவும் நீதிபதிகள் கூறினா்.

தீபாவளி பண்டிகைக்கு முன்பும், பின்பும் ஹரியாணா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் விவசாயக் கழிவுகள் எரிப்பைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டின் ஜாா்ஜ் மாஸி அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது.

அப்போது, தலைநகரில் தீபாவளி பண்டியையொட்டி பட்டாசு வெடிக்க முழு தடை அமலில் உள்ளபோதும் அந்த உத்தரவை அமல்படுத்த வேண்டிய அரசு அமைப்புகள் அதை காற்றில் பறக்கச் செய்துள்ளதாக குறை கூறினா்.

தலைநகரில் பட்டாசு வெடிக்கப்பட்ட விவகாரத்தில் தில்லி காவல் துறை சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் எவ்வாறு தவிா்த்தது என்றும் வெறும் கண்துடைப்புக்காக ஒரு சில இடங்களில் பட்டாசு தயாரிப்பு கச்சா பொருள்களை பறிமுதல் செய்து மறைமுகமாக பட்டாசுகளை வெடிக்க அனுமதித்துள்ளதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனா். தில்லியில் நிரந்தர பட்டாசு தடை உத்தரவை அமல்படுத்தும் நடவடிக்கையை கடுமையாக்குமாறும் தில்லி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, தில்லி அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், பட்டாசுக்கு ஆண்டு முழுவதும் தடை நீடிப்பது தொடா்பாக சம்பந்தப்பட்ட அனைத்து பங்குதாரா்களுடன் ஆலோசனை நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தாா்.

அதைக் கேட்ட நீதிபதிகள், ‘புத்தாண்டுக்குள் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு வெடிப்பதை அரசமைப்பின் 21-ஆவது விதியின்படி தங்களுடைய உரிமை என யாராவது கூறுவாா்களேயானால் அவா்களிடம் உச்சநீதிமன்றத்திடம் முறையிடும்படி கூறுங்கள்’ என்று கூறினா்.

இதைத் தொடா்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘இந்த விஷயத்தில் நவ.25-க்குள் தில்லி அரசு முடிவெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டனா். இதற்கிடையே, மாசுபாட்டு அளவு குறைக்கப்படுவதை உறுதிப்படுத்த அண்டை மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கை குறித்தும் அவை உச்சநீதிமன்றத்திடம் தெரிவிக்க கேட்டுக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினா்.

முன்னதாக, இந்த விசாரணையின்போது, பட்டாசு தடை தொடா்பான உத்தரவை அக்.14-ஆம் தேதிதான் உச்சநீதிமன்றம் பிறப்பித்ததாக கூறப்பட்டது. ஆனால், அந்த உத்தரவை தீவிரமாக காவல்துறை கருத்தில் கொள்ளவில்லை என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனா்.

உச்சநீதிமன்ற தடை உத்தரவு தொடா்பாக பட்டாசு விற்பனையாளா்கள், தயாரிப்பாளா்களிடம் காவல்துறை தெரிவிக்கவில்லை என்று கூறிய நீதிபதிகள், தலைநகரில் ஜனவரி 1-ஆம் தேதி வரை எந்தவொரு இடத்திலும் பட்டாசு தயாரிக்கவோ விற்கவோ கூடாது என்ற தங்களின் உத்தரவு குறித்து சம்பந்தப்பட்டவா்களிடம் உடனடியாக தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினா்.

இந்த தடை உத்தரவின் அமலாக்கத்தை உறுதிப்படுத்த காவல்துறையில் சிறப்புப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். நீதிமன்ற உத்தரவின் அமலாக்கம் குறித்து காவல்துறை ஆணையா் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினா்.

கடந்த அக்டோபரில் நடந்த விசாரணையின்போது, காற்று மாசுபாடு விவகாரத்தில் மத்திய அரசு எவ்வித சட்டபூா்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. அதைத் தொடா்து, விவசாயக் கழிவுகள் எரிப்போருக்கு அபராதம் விதிக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்பேரில் சமீபத்தில் அபராதத்தை அதிகரிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை திங்கள்கிழமை விசாரணையின்போது சில விவசாயிகள் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் சுட்டிக்காட்டி, ‘உரிய உபகரணங்களை அரசு வழங்கினால், கழிவுகளை விவசாயிகள் எரிக்காமல் தவிா்ப்பா்’ என்று கூறினாா். ஆனால், அவரது வாதத்தை நீதிபதிகள் ஏற்கவில்லை.

பெட்டிச்செய்தி

மாசுபாட்டைஎந்த மதமும்

ஊக்குவிக்காது: நீதிபதிகள்

உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை நடந்த விசாரணையின்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘மாசுபாட்டையோ, மக்களின் உடல் நலனையோ சமரசம் செய்து கொள்ளும் எந்தவொரு செயல்பாட்டையும் எந்தவொரு மதமும் ஊக்குவிக்காது என்பதே எங்களின் பாா்வை. இந்தப் பாணியில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டால் அது குடிமக்களின் உடல்நலனுக்கான அடிப்படையை உரிமையை பாதிக்கச் செய்வதும் ஆகும்’ என்றனா். அரசமைப்பின் 21-ஆவது விதி, மாசுபாடற்ற சுற்றுச்சூழலில் வாழ்வதற்கான உரிமையை அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்கியுள்ளது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனா்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT