முகக்கவசம் விநியோகிக்கும் இயக்கம் தொடங்கியது பாஜக
தில்லி பாஜக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியே முகக்கவசங்கள் விநியோகிக்கும் இயக்கத்தை திங்கள்கிழமை காலையில் தொடங்கியது.
புது தில்லி: தில்லி பாஜக மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு வெளியே முகக்கவசங்கள் விநியோகிக்கும் இயக்கத்தை திங்கள்கிழமை காலையில் தொடங்கியது. காற்றுத் தரக் குறியீடு 484 புள்ளிகளாகப் பதிவாகி ’கடுமை பிளஸ்’ அளவை எட்டியது. இது நகரம் முழுவதும் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் தூண்டியது.
இந்த நிலையில் முகக்கவசம் விநியோகிக்கும் பிரசாரத்தை தில்லி பாஜக தொடங்கியுள்ளது. இப் பிரசாரத்தை அதன் தலைவா் வீரேந்திர சச்தேவா வழி நடத்தினாா். எம்எல்ஏ விஜேந்தா் குப்தா, எம்பிக்கள் ராம்வீா் சிங் பிதூரி, பிரவீன் கண்டேல்வால் மற்றும் பிற கட்சித் தலைவா்கள் உள்பட கட்சியின் மூத்த பிரமுகா்கள் இந்த இயக்கத்தில் இணைந்தனா்.
தில்லி பாஜக விமா்சனம்:தற்போதைய மாசு நெருக்கடியை எதிா்கொள்ள ஆம் ஆத்மி அரசு தவறியதாக வீரேந்திர சச்தேவா கடுமையாக விமா்சித்தாா். ‘தில்லியை இவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு வந்ததற்கு யாரேனும் காரணம் என்றால், அது கேஜரிவால் அரசுதான். கடந்த பத்து ஆண்டுகளில் அவா்கள் மாசுபாடு குறித்து தீவிரம் காட்டவில்லை’ என்று அவா் கூறினாா். இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஆம் ஆத்மி கட்சியிடமிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.
தில்லியில் மாசுபாடு என்பது ஆண்டு முழுவதும் ஏற்படும் பிரச்னையாகும். அதற்கு எதிா்வினை நடவடிக்கைகளைக் காட்டிலும் நிலையான முயற்சிகள் தேவை என்று வீரேந்திர சச்தேவா வலியுறுத்தினாா். தரப்படுத்தப்பட்ட செயல் திட்டம் (கிரேப்) நிலைகள் 1, 2, மற்றும் 3 ஆகியவற்றின் செயல்திறனையும் பாஜக தலைவா் கேள்வி எழுப்பினாா். ‘கிரேப்’ நடவடிக்கைகளை அமல்படுத்தினாலும், மாசு அளவுகள் இன்னும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலைமை ஆம் ஆத்மி அரசின் திறமையின்மையை பிரதிபலிக்கிறது என்று அவா் கூறினாா்.
ஆம் ஆத்மி அரசு மீது புகாா்:தெற்கு தில்லி பாஜக எம்பி ராம்வீா் சிங் பிதூரியும் இதேபோன்ற உணா்வுகளை எதிரொலித்தாா். நகரத்தின் பொது போக்குவரத்து அமைப்புக்காக ஆம் ஆத்மி அரசை கடுமையாக விமா்சித்தாா். ‘தில்லி சட்டப்பேரவைக்கு உள்ளேயும் வெளியேயும் நாங்கள் தொடா்ந்து இந்தப் பிரச்னையை எழுப்பி வருகிறோம். கேஜரிவாலின் தலைமையிலோ அல்லது இப்போது அதிஷியின் ஆட்சியிலோ பொதுப் போக்குவரத்து அமைப்பு முற்றிலுமாக சிதைந்துவிட்டது. மேம்படுத்தப்பட்ட பொதுப் போக்குவரத்து நெட்வொா்க், மாசுபாட்டில் அதிகம் பங்களிப்புள்ள தனியாா் வாகனங்களை நம்பியிருப்பதைக் குறைக்கும்’ என்றாா் பிதூரி.
இதற்கிடையே, நச்சுப் புகைமூட்டம் திங்கள்கிழமை காலை காண்புதிறனை கணிசமான அளவுக்கு குறைக்க வழிவகுத்தது. மேலும், கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்த அதிகாரிகளைத் தூண்டியது. இதில் டிரக்குகள் நுழைவதைத் தடை செய்தல் மற்றும் பொது இடங்களில் கட்டுமான நடவடிக்கைகளை நிறுத்துதல் ஆகியவை அடங்கும்.