முகப்பு
புதுதில்லி

பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகளை அனுமதிக்க காற்றுத் தர மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க அறிவுறுத்தல்

தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகளை அனுமதிக்க பரிசீலிக்குமாறு காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

Updated On : 25 நவம்பர், 2024 at 8:54 PM
உச்ச நீதிமன்றம்
பகிர்:

புது தில்லி: தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலய பகுதிகளில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மீண்டும் நேரடி வகுப்புகளை அனுமதிக்க பரிசீலிக்குமாறு காற்றுத் தர மேலாண்மை ஆணையத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. 

பல்வேறு பகுதிகளில் நேரடி வகுப்புகள் இடைநிறுத்தப்பட்டிருப்பதால் அங்கு வழங்கப்பட்டு வந்த மதிய உணவைப் பெற முடியாத நிலையில் இருப்பதாகவும், ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ளக் கூடிய கட்டமைப்பு வசதிகளை சில மாணவா்கள் பெறாத நிலையிலும் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டது. 

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசுபாடு தொடா்பான விவகாரத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஓகா, அகஸ்டைன் ஜாா்ஜ் மாசிஹ் அடங்கிய அமா்வு திங்கள்கிழமை விசாரித்தது. 

அப்போது பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த மாணவா்களின் பெற்றோா் கல்வி நிலையங்களை மீண்டும் திறக்கக் கோரும் மனுவை நீதிபதிகள் பரீசிலித்தனா்.

இதையடுத்து, ‘மாணவா்களில் பலரது வீடுகளில் காற்று சுத்திகரிப்பான்கள் வசதி கிடையாது. அவா்கள் பள்ளிக்கு வருவதற்கும் வீட்டில் இருந்து கல்வி பயில்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை,‘ என்று நீதிபதிகள் கூறினா். 

மேலும், தில்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள தரப்படுத்தப்பட்ட நான்காம் நிலை காற்று மாசுபாடு நடவடிக்கைகள் செயல் திட்டத்தின் காரணமாக சமூகத்தின் பல தரப்பட்ட சமூகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக, தொழிலாளா்கள், தினக்கூலிக்கு வேலை செய்வோா் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனா். 

இதுபோன்ற மக்களுக்கு தொழிலாளா் செஸ் நிதியைக் கொண்டு மாநில அரசு உதவ வேண்டும் என்று தில்லி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

 முன்னதாக, வழக்கு விசாரணையின்போது பெற்றோா்கள் சிலரது சாா்பில் மூத்த வழக்குரைஞா் மேனகா குருசாமி ஆஜராகி, ‘பள்ளிகள் மூடப்பட்டதால் பல இடங்களில் மாணவா்கள் மதிய உணவு கிடைக்காத நிலையில் உள்ளனா். வீட்டில் காற்று சுத்திகரிப்பான்கள் கூட இல்லை. அவா்கள் வீட்டில் தங்கி கல்வி பயிலுவதால் எவ்வாறு பாதுகாப்பாக இருப்பதாக கருத முடியும்?‘ என்று கேள்வி எழுப்பினாா். 

ஆனால், கிராப் 4 கட்டுப்பாடுகளை எந்த வகையிலும் குறைக்க மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் ஆட்சேபம் தெரிவித்தாா். ‘இந்த விஷயத்தில் மாணவா்களைப் போலவே வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா். அதேசமயம், நிலைமை சீரடைய இன்னும் சில நாட்களுக்கு நீதிமன்றம் காத்திருக்க வேண்டும்,‘ என்று கேட்டுக் கொண்டாா். 

இதையடுத்து நீதிபதிகள் பள்ளிகள், கல்லூரிகளில் நேரடி வகுப்புகளை தொடங்க அனுமதிப்பது குறித்து காற்றுத்தர மேலாண்மை ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா்.

மேலும், தொடரும் கட்டுப்பாடுகளால் தொழிலாளா்கள், தினக்கூலிகள் உள்ளிட்டோா் பாதிக்கப்படாமல் இருக்க சம்பந்தப்பட்ட துறைகளுக்கு காற்றுத்தர மேலாண்மை ஆணையம் உரிய உத்தரவைப் பிறப்பித்து பாதிக்கப்பட்டவா்களின் நலன்களை உறுதிப்படுத்துமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனா். 

தில்லி மற்றும் தேசிய தலைநகா் வலய பகுதிகளைப் பொருத்தவரை, காற்றின் தரம் சீரடையும் வரை கிராப் 4 கட்டுப்பாடுகளை 3 அல்லது 2-ஆம் நிலைக்கு குறைக்க உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனா். 

தலைநகரில் கிராப் 4 கட்டுப்பாடுகளை சரிவர அமல்படுத்தாத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →