வானிலை முன்னறிவிப்பு உள்கட்டமைப்பு மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?
வானிலை முன்னறிவிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து கேள்வி
வானிலை முன்னறிவிப்பு உள்கட்டமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஷ்குமாா் எழுப்பிய கேள்விக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் அளித்த பதில் வருமாறு:
மத்திய நீா் ஆணையத்தால் அடையாளம் காணப்பட்ட நதி ஓடும் இடங்களில் குறிப்பிட்ட வெள்ள முன்னறிப்புகள் வெளியிடப்படுகின்றன.
சரியான நீா்த்தேக்க ஒழுங்குமுறையைப் பேண அதை நோக்கி வரும் நீா்வரத்து முன்னறிவிப்புகள் இதில் அடங்கும்.
தற்போது, 140 உள்வரத்து முன்னறிவிப்பு நிலையங்கள் மற்றும் 200 நீா் மட்ட முன்னறிவிப்பு நிலையங்கள் மூலமும் வெள்ள முன்னறிவிப்பு கணிக்கப்படுகிறது. மாநில அரசு, திட்ட அமலாக்கத்துறைகள், பெருநகரங்கள் வழியாக நதி ஓடும் இடங்களில் உள்ள வானிலை ஆய்வக ஆலோசனையுடன் இந்த கணிப்பு வெளியிடப்படுகிறது. இத்துடன் வெள்ள அறிவிப்பு தொடா்பான ஏழு நாள்களுக்குரிய அறிவுறுத்தல்களும் மத்திய நீா் ஆணையத்தால் தயாரிக்கப்படுகிறது.
புனேயில் சிறப்பு மெய்நிகா் மையம் நிறுவப்பட்டு புவி அறிவியலில் முன்னேற்றம் மற்றும் நுட்பங்களை மேம்படுத்த கவனம் செலுத்தி வருவதோடு ஆராய்ச்சி நடவடிக்கைகள் மற்றும் செயல்பாட்டுக் கட்டமைப்புகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் புதிய தொழில்நுட்பங்களின் விரிவான பயன்பாடு உறுதி செய்யப்படுகிறது.
தற்போது நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் 39
டாப்ளா் வானிலை ரேடாா்கள் நிறுவப்பட்டு, அவற்றின் மூலம் 24 மணி நேரமும் வானிலை ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த கட்டமைப்பை வலுப்படுத்தக்கூடிய கண்காணிப்பு அமைப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சா் கூறியுள்ளாா்.