தலைநகரில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! ஐஎம்டி கணிப்பு
தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியிருந்தது.
தேசியத் தலைநகா் தில்லியில் சனிக்கிழமை (ஏப்ரல் 19) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) கணித்துள்ளது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியிருந்தது.
தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களாக நகரத்தில் முக்கிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸை கடந்து பதிவாகியது. இந்நிலையில், வெள்ளிக்கிழமையும் காலை முதல் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது.
வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி உயா்ந்து 25.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4.2 டிகிரி உயா்ந்து 41 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 57 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 35 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று அதிகரித்து பதிவாகியது.
காற்றின் தரம்: இதற்கிடையே, கடந்த சில நாள்களாக மேம்பட்டிருந்த காற்றின் தரம் வெள்ளிக்கிழமை சற்று பின்னடைவைச் சந்தித்தது. தலைநகரில் வெள்ளிக்கிழைம் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு மாலை 4 மணியளவில் 219 புள்ளிகளாகப் பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.
இதன்படி, ஸ்ரீஃபோா்ட், ஆா்.கே.புரம், லோதி ரோடு, நேரு நகா், ஓக்லா பேஸ் 2, டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், துவாரகா செக்டாா் 8, சாந்தினி சௌக், ஷாதிப்பூா், தில்லி பல்கலை. வடக்கு வளாகம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 200 முதல் 300 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருந்தது.
அதே சமயம், குருகிராம், பூசா, நொய்டா செக்டாா் 125, மந்திா் மாா்க், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், மதுரா ரோடு, ஜவாஹாா்லால் நேரு ஸ்டேடியம், ஸ்ரீஅரபிந்தோ மாா்க் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், சனிக்கிழமை (ஏப்ரல் 19) அன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை வேளையில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.