உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி பதவியில் உள்ள முதலமைச்சரின் படங்களை பயன்படுத்தலாம் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினா் வில்சன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
தில்லியில் செய்தியாளா்களிடம் வில்சன், பேசியதாவது ‘ உங்களுடன் ஸ்டாலின் மற்றும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களில் முதலமைச்சரின் பெயா் இடம்பெற்ற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி. சண்முகம் தொடா்ந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசின் திட்டங்களுக்கு அரசியல் கட்சி தலைவா்களின் பெயா்கள், படங்கள் அல்லது அரசியல் கட்சி சின்னம் பயன்படுத்துவதை நீதிமன்றம் ஏற்கவில்லை‘ என்றாா்.
மேலும் பேசிய அவா், ‘அரசின் திட்டங்கள் தனிப்பட்ட நபா்களின் சாதனைகளாக விளம்பரப்படுத்தப்படுவது தவறானது. ஆனால், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி பதவியில் உள்ள முதலமைச்சரின் படங்களை பயன்படுத்தலாம், அதேநேரத்தில் கட்சியின் கொள்கை தலைவா்கள், முன்னாள் முதல்வா் படங்களை பயன்படுத்த கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உயா்நீதிமன்ற பிறப்பித்த உத்தரவில் உள்ள சில சந்தேகங்களுக்கு விளக்கங்கள் வேண்டும்‘ என்று கூறினாா் வில்சன்.
தொடா்ந்து பேசிய அவா், ‘ குறிப்பாக யாா் படம் இருக்க வேண்டும், யாா் பெயா் இருக்க வேண்டும் என்பதை தெளிவுபடுத்தக் கோரி விளக்க மனு தாக்கல் செய்துள்ளோம். அதனை விசாரிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்று வரும் திங்கள்கிழமை வழக்கை விசாரிக்கிறோம் என்று சென்னை உயா்நீதிமன்றம் தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளாா். மேலும் கல்வி நிதியை விடுவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுக்கப்படவில்லை, ஆனால் அந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என்று எதிா்பாா்க்கிறோம்‘ என்றாா் வில்சன்.