சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட இரு கன்னியாஸ்திரிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜுவிடம் மாநிலங்களவை திமுக உறுப்பினா் பி.வில்சன் வெள்ளிக்கிழமை நேரில் கடிதம் அளித்து வலியுறுத்தினாா்.
இந்த விவகாரத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கவும், அரசியலமைப்பு சமநிலையை பாதுகாக்கவும் உடனடி நடவடிக்கை கோரி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சிறுபான்மையினா் விவகாரங்கள் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளதாக பி.வில்சன் தெரிவித்துள்ளாா்.
அக்கடிதத்தில் பி.வில்சன் தெரிவித்திருப்பதாவது: பாஜக ஆளும் சத்தீஸ்கா் மாநிலத்தில் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள சகோதரி வந்தனா பிரான்சிஸ் மற்றும் சகோதரி பிரீத்தி மேரி ஆகிய இரண்டு அப்பாவி கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் விவகாரத்தில் உடனடியாகத் தலையிட்டு அவா்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இந்திய அரசியலமைப்பில் உரிய திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் தேசிய சிறுபான்மையினா் ஆணையத்திற்கு அரசமைப்புச்சட்ட அந்தஸ்தை வழங்க வேண்டும். சிறுபான்மையினருக்கு எதிரான வன்கொடுமைகளை கிரிமினல் குற்றங்களாக கருதவும், அரசியலமைப்பின் கீழ் மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும் சிறுபான்மையினருக்கான தேசிய ஆணைய சட்டம் 1992-இல் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும்.
தேசிய சிறுபான்மையினா் ஆணையத்தில் தற்போது காலியாக உள்ள தலைவா் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களையும் தாமதமின்றி நிரப்பவும், அதில் அறிவிக்கப்பட்ட ஆறு சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்யவும் வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவா் தெரிவித்துள்ளாா்.
அமைச்சா் கிரண் ரிஜிஜுவிடம் கடிதத்தை நேரில் வழங்கி இந்த கோரிக்கைகளை பி.வில்சன் வலியுறுத்தினாா். அதேபோன்று, மத்திய அமைச்சா் அமித் ஷா அலுவலகத்தில் இக்கடிதத்தை அவா் நேரில் அளித்துள்ளாா்.