நுண்நெகிழி 
புதுதில்லி

குளிர் காலத்தைவிட கோடையில் அதிக அளவில் நுண்நெகிழிகளைச் சுவாசிக்கும் தில்லிவாசிகள்!

இந்தத் துகள்களில் ஜிங்க், சிலிகான், அலுமினியம் போன்ற நுண்உலோகங்களும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது...

தினமணி செய்திச் சேவை

தில்லிவாசிகள் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் நுண்நெகழித் துகளின் அளவு (மைக்ரோ பிளாஸ்டிக்) குளிர்காலத்தைவிட கோடையில் அதிகமாக இருப்பது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தில்லிவாசிகள் குளிர்காலத்தில் ஒரு நாளில் சராசரியாக 10.7 துகள்களைச் சுவாசிக்கும் நிலையில், கோடையில் இந்த அளவு 21.1 என அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய புவியியல் துறையின் கீழ் செயல்படும் இந்திய வெப்பமண்டல வானிலை கழகம் (ஐஐடிஎம்) மற்றும் சாவித்ரிபாய் பூலே புணே பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.

6 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் குளிர்காலத்தில் சுவாசிக்கும்போது ஒரு நாளுக்கு 8.1 துகள்கள் அவர்களது உடலுக்குகள் செல்கின்றன. கோடை காலத்தில் இந்த அளவு 15.6 ஆக உள்ளது. 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் குளிர்காலத்தில் 6.1 துகள்களையும் கோடை காலத்தில் 8.1 துகள்களையும் சுவாசக் காற்றின் மூலம் உள்ளே இழுக்கின்றனர்.

மத்திய தில்லியின் லோதி சாலையில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மைய கட்டடத்தின் மாடியில் இதற்கான சாதனம் பொருத்தப்பட்டு, கடந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான குளிர்காலத்திலும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடை காலத்திலும் காற்றில் உள்ள துகள் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

அவற்றில் பிஎம் 10 (10 மைக்ரோமீட்டர் விட்டத்துக்கும் குறைவான நுண்துகள்கள்), பிஎம் 2.5 (2.5 மைக்ரோமீட்டர் விட்டத்துக்கும் குறைவான நுண்துகள்கள்), பிஎம்1 (ஒரு மைக்ரோமீட்டர் விட்டத்துக்கு குறைவான நுண்துகள்) ஆகியவை குறித்து ஆய்வு செய்யப்பட்டன.

கடந்த ஆண்டின் கோடை மற்றும் குளிர்காலங்களில் பிஎம் 10 கன சதுர மீட்டருக்கு 1.87 துகள்களாக இருந்தது. பிஎம் 2.5, 0.51 என்றும் பிஎம்1 0.49 என்றும் பதிவாகியிருந்தது. அவற்றின் செறிவு ஜனவரியில் இருந்து ஜூனில் படிப்படியாக உயர்ந்திருந்தன.

ஆய்வு காலத்தில் சேகரிப்பட்ட மாதிரிகளில் நெகிழி மற்றும் நார் வடிவங்களில் என மொத்தம் 2,087 நுண்துகள்கள் இருப்பது அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 40 சதவீதம் தண்ணீர் பாட்டில்கள், உணவு பொட்டலங்கள், ஆடைகளில் காணப்படும் பொதுவான நெகிழி வகையான பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் (பிஇடி) ஆகும்.

பாலிஎத்திலீன் 27 சதவீதம், பாலிஎஸ்டர் 18 சதவீதம், பாலிஸ்டைரீன் 9 சதவீதம் மற்றும் பாலி வினைல் குளோரைடு (பிவிசி) 5 சதவீதம் இருப்பது கண்டறியப்பட்டது.

மேலும், இந்தத் துகள்களில் ஜிங்க், சிலிகான், அலுமினியம் போன்ற நுண்உலோகங்களும் கலந்திருப்பது தெரியவந்துள்ளது. இத்தகைய நுண்நெகிழித் துகள் உருவாகுவதற்கு காரணமாக நெகிழிக் கழிவுகள் உள்ளன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவின்படி, தில்லியில் நாள்தோறும் 1,145 டன் நெகிழிக் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் 635 டன்கள் ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கியெறியப்படும் நெகிழிகளாகும்.

தேசிய அளவில் நாள்தோறும் 25,945 டன்கள் கழிவுகள் உருவாகின்றன. அவற்றில் 689.8 டன்கள் கழிவுடன் தில்லி முதல் இடத்தில் உள்ளது. ஆடை தயாரிப்பு, பேக்கேஜிங் கழிவுகள், வீட்டில் ஆடைகளை துவைத்தல் போன்றவை நுண்நெகிழித் துகள் உருவாக்கத்துக்கு முக்கிய ஆதாரங்களாக உள்ளன. மேலும், வடமேற்கு நோக்கி செல்லும் காற்றின் மூலம் தொழிற்பேட்டைகள், சந்தைகள், குப்பைகளை எரிக்கும் பகுதிகள் ஆகியவற்றில் இருந்து நுண்நெகிழித் துகள்கள் தில்லிக்கு கொண்டு வரப்படுகின்றன.

1,483 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட தில்லியில் 3 கோடி மக்கள் வசிக்கின்றனர். இங்கு நிலவும் தீவிர வானிலையுடன் அதிக அளவிலான மாசுபாடுகளும் காணப்படுகின்றன. இந்தச் சூழல் நகரத்தை காற்றில் மிதக்கும் நுண்நெகிழிகளின் மையமாக மாற்றிவிடுகிறது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நுண்நெகழித் துகள்களைச் சுவாசிப்பதில் அதிகபட்ச பாதுகாப்பான அளவு நிர்ணயிக்கப்படவில்லை. இருப்பினும், தொடர்ந்து அவற்றைச் சுவாசிப்பதன் மூலம் ஆஸ்துமா, நிமோனியா, நுரையீரல் அழற்சி மற்றும் புற்றுநோய்க்குக் கூட வழிவகுக்கலாம். இந்த நுண்துகள்கள் சுவாசத்தின்போது பாக்டீரியாவை நுரையீரலுக்கு எடுத்துச் செல்வதன் மூலம் நுரையீரலின் செயல்பாட்டை மட்டுமல்லாமல் தோல் மற்றும் மூளை செல்களையும் பாதிக்கும்.

சுற்றுச்சூழலில் காணப்படும் நுண்நெகிழிகள் சுவாச வழியாக மட்டுமல்லாமல், உணவு மற்றும் குடிநீர் அல்லது அன்றாட வாழ்வியல் செயல்முறைகள் மூலம் மனிதர்களின் உடலுக்குள் செல்ல முடியும்.இதனால் ஏற்படும் பாதிப்புகள் வயது, தொழில், உடல்ஆரோக்கியம், சுவாச விகிதம் ஆகியவற்றைப் பொருத்து அமையும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் 6 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: நான்கு நாட்களில் மூன்றாவது சம்பவம்!

தவெக மாநாடு! இரும்புக் கம்பிகளுக்கு கிரீஸ் தடவுவதை ஆச்சரியத்துடன் பார்க்கும் தொண்டர்கள்

பேளூரில் சுவாமி ஊர்வலத்தில் மோதல்: பொதுமக்கள் சாலை மறியல்!

அமெரிக்காவில் எரிபொருள் நிரப்ப ரூ.2.20 கோடி ரொக்கமாக கொடுத்தாரா புதின்? அவசியம் ஏன்?

இபிஎஸ்ஸுக்கு எதிரான வழக்கின் விசாரணைக்குத் தடையில்லை! - உயர்நீதிமன்றம்

SCROLL FOR NEXT