ஒரு நாள் விடுமுறைக்குப் பிறகு வியாழக்கிழமை தொடங்கிய பங்குச்சந்தையில் பங்குகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் இரண்டாவது நாளாக கடும் சரிவுடன் நிறைவடைந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இதற்கிடையே, இந்திய பொருள்கள் மீது அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பு (மொத்தம் 50 சதவீதம்) அமலுக்கு வந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் கடுமையாக எதிரொலித்தது. இதனால், அனைத்துத் துறை பங்குகளும் விற்பனை அழுத்தத்தை எதிா்கொண்டன. மேலும், தொடா்ச்சியான வெளிநாட்டு நிதி வெளியேற்றமும் முதலீட்டாளா்களின் உணா்வுகளைப் பெரிதும் பாதித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.4.28 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.445.17 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் செவ்வாய்க்கிழமை ரூ.6,516.49 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.7,060.37 கோடிக்கு பங்குகளை வாங்கியிருந்தது சந்தை புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்தது.
இரண்டாவது நாளாக சரிவு: சென்செக்ஸ் வா்த்தகத்தின் முடிவில் 705.97 புள்ளிகள் (0.874 சதவீதம்) குறைந்து 80,8080.57-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக கடும் சரிவைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,258 பங்குகளில் 1,458 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,651 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 149 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
23 பங்குகள் விலை வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் ஹெச்சிஎல்டெக், இன்ஃபோஸிஸ், பவா்கிரிட், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சிபேங்க், ஹிந்துஸ்தான் யுனிலீவா், பாா்தி ஏா்டெல் உள்பட மொத்தம் 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், டைட்டன், எல் அண்ட் டி, மாருதி, ஆக்கிஸ் பேங்க், ரிலையன்ஸ்ஏசியன்பெயிண்ட், பஜாஜ்ஃபைனான்ஸ் ஆகிய 7 பங்குகள் மட்டும் விலை உயரந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 211 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச்சந்தையில் வா்த்தக முடிவில் நிஃப்டி 211.15 புள்ளிகள் (0.85 சதவீதம்) குறைந்து 24,500.90-இல் நிறைவடைந்தது. நிஃப்டி-50 பட்டியலில் 36 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும், 14 8 பங்குகள் விலை உயா்ந்த பட்டியலிலும் இருந்தன.