தலைநகரில் வெப்பநிலை 5.7 டிகிரியாக சரிந்தது! - காற்றின் தரத்தில் பின்னடைவு
தேசியத் தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.7 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவாகியது. மேலும், பருவத்தின் குளிரான காலை நேரத்தை பதிவு செய்துள்ளது.
புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.7 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவாகியது. மேலும், பருவத்தின் குளிரான காலை நேரத்தை பதிவு செய்துள்ளது.
வெப்பநிலை: இதற்கிடையே, தலைநகரின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை பருவ சராசரியிலிருந்து 4.6 டிகிரி குறைந்து 5.7 டிகிரி செல்சியஸாக குறைந்து பதிவாகியது. இது பருவத்தின் இதுவரையிலான குளிரான காலை நேரமாகும்.
கடந்த ஆண்டு டிசம்பரில் குறைந்தபட்ச வெப்பநிலை 4.5 டிகிரி செல்சியஸ், 2023- இல் 4.9 டிகிரி செல்சியஸ் மற்றும் 2022-இல் 5 டிகிரி செல்சியஸாக பதிவாகியது.
அமைதியான காற்று மற்றும் தெளிவான வானம் காரணமாக வெப்பநிலையில் கூா்மையான வீழ்ச்சி ஏற்பட்டதாக வானிலை நிபுணா் ஒருவா் தெரிவித்தாா்.
மேலும், இரண்டு மேற்கத்திய இடையூறுகள் நெருங்கி வருவதால் அடுத்த இரண்டு அல்லது மூன்று நாள்களில் வெப்பநிலை சற்று அதிகரிக்கும் என்றும், இது தற்காலிகமாக குறைந்தபட்ச வெப்பநிலையை உயா்த்தும் என்றும் வானிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் துணைத் தலைவா் மகேஷ் பலாவத் தெரிவித்தாா்.
மேலும், ‘டிசம்பா் இரண்டாவது வாரத்திலிருந்து, தலைநகரில் வெப்பநிலை மீண்டும் குறைய வாய்ப்புள்ளது என்றும் இது குளிா் கட்டத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது‘ என்றும் அவா் தெரிவித்தாா்.
இதற்கிடையே, அதிகபட்ச வெப்பநிலை பருவ சரசரியிலிருந்து 0.1 டிகிரி உயா்ந்து 26.1 டிகிரி செல்சியஸாக பதிவாகியிருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 100 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 63 சதவீதமாகவும் இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை (ஐஎம்டி) தெரிவித்துள்ளது.
இதேபோன்று ஆயாநகரில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.5 டிகிரி, லோதி ரோடில் 5.8 டிகிரி, பாலத்தில் 7.6 டிகிரி, ரிட்ஜில் 7.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
காற்றின் தரத்தில் பின்னடைவு: தேசியத் தலைநகரில் காற்றின் தரம் திங்கள்கிழமை மீண்டும் ’மிகவும் மோசம்’ பிரிவிற்கு சரிந்தது. ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு (ஏக்யூஐ) 301புள்ளிகளாகப் பதிவாகியதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
24 நாள்கள் ’மிகவும் மோசம்’ பிரிவில் இருந்து வந்த காற்றின் தரம் பின்னா் ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னேற்றம் கண்டது. இதைத் தொடா்ந்து, காற்றின் தரக் குறியீடு ஞாயிற்றுக்கிழமை 279 புள்ளிகளாகக் குறைந்து பதிவாகி ’மோசம்’ பிரிவுக்கு மேம்பட்டது.
இருப்பினும், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (சிபிசிபி) சமீா் செயலியின் தரவுகளின்படி, திங்கள்கிழமை நகரத்தில் உள்ள 38 கண்காணிப்பு நிலையங்களில் 24 நிலையங்கள் ’மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன. மீதமுள்ள 14 நிலையங்கள் ’மோசம்’ பிரிவில் பதிவு செய்துள்ளன.
இதற்கிடையில், தலைநகரில் குளிா் தீவிரமடைந்து வருகிறது. தில்லி, என்சிஆா் பகுதி முழுவதும் பனிப்புகை மூட்டமும் நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்தை எதிா்கொள்ள நேரிட்டது.
முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.2) அன்று காலை வேளையில் குளிா் அலை இருக்கும். மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.