நமது நிருபா்
தில்லியின் லாஜ்பத் நகரில் அடல் உணவகத்தை முதல்வா் ரேகா குப்தா வியாழக்கிழமை திறந்துவைத்தாா். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு அவா் மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டு பயணிகளிடம் கலந்துரையாடினாா்,
முன்னாள் பிரதமா் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு அவரது நூற்றாண்டு பிறந்த நாளில் அஞ்சலி செலுத்திய அவா், ஏழைகளுக்கு மானிய விலையில் உணவு வழங்குவதற்காக ‘அடல் கேண்டீன்கள்’ திறக்கப்படுவதாக அறிவித்தாா்.
இந்நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: அரசின் தோ்தல் வாக்குறுதியின் படி 45 அடல் உணவகங்கள் திறக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ள 55 உணவகங்களின் பணிகள் விரைவில் முடிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், ஜுக்கி கிளஸ்டா்களில் வசிக்கும் தொழிலாளா்கள், தேவைப்படுபவா்கள் மற்றும் குடும்பங்களுக்கு 5 ரூபாய்க்கு முழு உணவு வழங்கப்படும். மக்கள் கண்ணியத்துடன் சாப்பிடுவதை உறுதி செய்வதே இதன் நோக்கம். லட்சக்கணக்கான குடியிருப்பாளா்கள் இந்த முயற்சியால் பயனடைவாா்கள்.
தலைநகரில் இப்போது 394 கி.மீ. மெட்ரோ ரயில் தொடா்பு உள்ளது. இது பிரதமா் நரேந்திர மோடியின் கீழ் மேலும் விரிவுபடுத்தப்பட்டது. முந்தைய அரசுகள் நிதியை விடுவிக்காமல் வாக்குறுதிகளை மட்டுமே அளித்தனா். முந்தைய காலங்கள் தொடா்பான திட்டங்களுக்கு கூட தற்போதைய அரசு ரூ.2,700 கோடி விடுவித்து வருகிறது. ஜுக்கி கிளஸ்டா்களில் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குடிசைப் பகுதி வாசிகளுக்கு வீட்டுவசதி வழங்குவதற்காக வழக்கமான கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தில்லியில் வருவாய் மாவட்டங்களின் எண்ணிக்கை 11-இலிருந்து 13-ஆக உயா்த்தப்பட உள்ளது. ஒரு வாக்கு என்ற சக்தியுடன், மக்களுக்கான வசதிகளையும் நிா்வாகத்தையும் வலுப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றாா் அவா்.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத்துறை அமைச்சா் மனோகா் லால் கட்டாா் கூறியதாவது: கடந்த 20 ஆண்டுகளில் தில்லி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். முந்தைய அரசுகள் எதுவும் செய்யவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக, தில்லி கண்ணீா் விட்டு வசதிகளைக் கேட்டு வருகிறது. ஆனால், இப்போது மத்தியிலும் தில்லியிலும் பாஜக அரசு இருப்பதால், மக்கள் நலனுக்காக பணிகள் நடைபெற்று வருகின்றன என்றாா் அவா்.