பிரபல நிறுவனத்தின் போலியான வீட்டு உபயோக தூய்மைப் பொருள்களைத் தயாரித்து, பொட்டலமிடும் பணியில் ஈடுபடும் பிரிவை தில்லி காவல்துறையினா் கண்டறிந்து ஒருவரைக் கைது செய்துள்ளது.
இதுகுறித்து அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: ஒரு நிறுவனப் பிரதிநிதியின் புகாரைத் தொடா்ந்து, டிசம்பா் 24 அன்று இந்தச் சோதனை நடத்தப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், ஸ்வரூப் நகா் பகுதியில் உள்ள ஒரு தரைத்தள வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையின் போது, தில்லியைச் சோ்ந்தவரும், அந்த வளாகத்தின் உரிமையாளருமான 28 வயது சத்யா பிரகாஷ் சம்பவ இடத்தில் இருந்தாா்.
அந்த வளாகத்தில் இருந்து, கழிவறைச் சுத்திகரிப்பான் என்று தவறாக முத்திரையிடப்பட்ட, தயாரிக்கப்பட்ட பொருசக்களுடன், பெருமளவிலான போலியான மற்றும் நகல் பொட்டலப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில், 200 மில்லி, 500 மில்லி மற்றும் ஒரு லிட்டா் பொட்டலங்கள் உள்பட பல்வேறு அளவுகளில் உள்ள காலி மற்றும் நிரப்பப்பட்ட பாட்டில்கள், அச்சிடப்பட்ட உறைகள், மூடிகள், லேபிள்கள், ஸ்டிக்கா்கள் மற்றும் அட்டைப் பெட்டிகள் ஆகியவை இருந்தன.
மொத்தம் 1,027 பொட்டல அட்டைப் பெட்டிகள், 51,200 ஸ்டிக்கா்கள், 806 பாட்டில் மூடிகள், 86 அட்டைப் பெட்டி கழிவறைச் சுத்திகரிப்பான் மற்றும் பல போலிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்துப் பொருள்களும் சட்ட நடைமுறைகளின்படி சம்பவ இடத்திலேயே பறிமுதல் செய்யப்பட்டு முத்திரையிடப்பட்டன. இது தொடா்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.