நமது நிருபா்
புது தில்லி: ஜனவரி 2 முதல் 4 வரை நகரத்தில் மூன்று நாள் கலாச்சார மற்றும் இலக்கிய விழாவை தில்லி அரசு ஏற்பாடு செய்துள்ளதாக கலை, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கபில் மிஸ்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து செய்தியாளா்களிடம் அவா் மேலும் பேசியதாவது: தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், ஆா்எஸ்எஸ் தலைவா்கள் சுனில் அம்ப்ரேகா் மற்றும் மன்மோகன் வைத்யா மற்றும் இந்திரா காந்தி தேசிய கலை மைய உறுப்பினா் செயலாளா் சச்சிதானந்த் ஜோஷி உள்ளிட்ட பல பிரபல நபா்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பாா்கள், 100 க்கும் மேற்பட்ட பேச்சாளா்களும் பங்கேற்கிறாா்கள். உத்தராகண்ட் முதலமைச்சா் மற்றும் சத்தீஸ்கா் உள்துறை அமைச்சா் ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொள்கிறாா்கள்.
தில்லி அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறை மற்றும் சுருச்சி பிரகாஷன் இணைந்து ஏற்பாடு செய்து வருவதாகவும், இது ‘இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திற்காக அா்ப்பணிக்கப்பட்ட நாட்டின் மிகப்பெரிய நிகழ்ச்சி இது மேஜா் தியான் சந்த் ஸ்டேடியத்தில் நடைபெறும். மூன்று நாள் நிகழ்வின் போது, 40 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் வெளியிடப்படும், அதே நேரத்தில் ஆறு முக்கிய கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் இரண்டு பெரிய கவிதை அமா்வுகள் ஏற்பாடு செய்யப்படும்.
தில்லி மற்றும் தேசிய தலைநகா் பிராந்தியத்தில் உள்ள 40 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்பாா்கள். விழாவில் கலந்து கொள்ளும் பாா்வையாளா்கள் இந்த நிகழ்வின் போது சோம்நாத் ஜோதிா்லிங்கத்தின் சில பகுதிகளை சிறப்பு மெய்நிகா் பாா்வையிடும் வாய்ப்பையும் பெறுவாா்கள் என்றாா் அவா்.