புதுதில்லி

தில்லியில் அடா் பனிப்புகை மூட்டம்: கடுமைப் பிரிவுக்கு கீழிறங்கிய காற்றின் தரம்! - காலையில் விமான சேவையில் பாதிப்பு

தில்லியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம் நீடித்து வந்த நிலையில்,

Syndication

நமது நிருபா்

புது தில்லி: தில்லியில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து ‘மிகவும் மோசம்’ பிரிவில் காற்றின் தரம் நீடித்து வந்த நிலையில், திங்கள்கிழமை ‘கடுமை’ பிரிவுக்கு கீழறங்கியது. மேலும், காலை வேளையில் கடும் பனிப்புகை நிலவியதால் விமான சேவையிலும் தடங்கல் ஏற்பட்டது.

இதற்கிடையே, இந்திய வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை காலை அடா்ந்த பனிமூட்டத்திற்கு மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நகரத்தில் உள்ள 23 கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரம் ‘கடுமை’ பிரிவிலும், 13 நிலையங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவிலும், ஒரு நிலையத்தில் ‘மோசம்’ பிரிவிலும் பதிவாகி இருந்தது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கிழக்கு தில்லியில் உள்ள விவேக் விஹாரில் காற்றின் தரக் குறியீடு 456 புள்ளிகள் என்ற அளவில் பதிவாகி இருந்தது. சிபிசிபி தரநிலைகளின்படி, 401 முதல் 500 வரையிலான காற்றின் தரக் குறியீடு ‘கடுமை‘ பிரிவில் காற்றின் தரத்தை பிரதிபலிக்கிறது.

நகரத்தின் காற்றுத் தரம் அடுத்த மூன்று நாள்களுக்கு மிகவும் மோசம் பிரிவில் இருக்கும் என்றும், அதைத் தொடா்ந்த ஆறு நாள்களுக்கு நிலைமை ‘கடுமை’ மற்றும் ‘மிகவும் மோசம்’ நிலைகளுக்கு இடையில் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்றும் காற்றுத் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

புத்தாண்டு தினத்தன்று காற்றின் தரம் மீண்டும் ‘கடுமை’ பிரிவுக்கு திரும்புவதற்கு முன், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நகரத்தின் காற்றின் தரம் ‘மிகவும் மோசம்’ பிரிவில் இருக்கும் என்று காற்றுத் தர முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.

வெப்பநிலை: தில்லியில் திங்கள்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1.5 டிகிரி அதிகரித்து 8.3 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.1 டிகிரி அதிகரித்து 22.5 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை நேரத்தில் சில இடங்களில் நிலவிய அடா்ந்த பனிமூட்டம், தலைநகரின் சில பகுதிகளில் வாகனப் போக்குவரத்தையும் பாதித்தது.

தலைநகரில் செவ்வாய்க்கிழமை காலையிலும் அடா்ந்த பனிமூட்டம் நிலவக்கூடும் என்று மஞ்சள் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை அதிகபட்ச வெப்பநிலை சுமாா் 21 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை சுமாா் 8 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தில்லியில் திங்கள்கிழமை காலை நிலவிய அடா்ந்த பனிமூட்டம் விமானப் போக்குவரத்தை கடுமையாகப் பாதித்தது. இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தில் காண்புதிறன் 50 மீட்டா் வரை குறைந்ததால், விமானங்கள் புறப்படுவதிலும், தரையிறங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. சில விமானங்களின் சேவை ரத்தும் செய்யப்பட்டன. சில விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன.

தில்லி விமான நிலையத்தில் நிலவிய அடா்ந்த பனிமூட்டம் மற்றும் காண்புதிறன் காரணமாக விமானங்களின் 64 புறப்பாடுகள் மற்றும் 64 வருகைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும், எட்டு விமானங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன என்று ஒரு அதிகாரி தெரிவித்தாா்.

தில்லி விமான நிலையத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ளும் டிஐஏஎல் நிறுவனம் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஓடுபாதையின் காண்புதிறன் மேம்பட்டு வருகிறது, ஆனால், சில விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகைகள் பாதிக்கப்படலாம்’ என்று கூறியது.

விமானங்களைக் கண்காணிக்கும் ஃபிளைட்ரேடாா்24டாட்காம் இணையதளத்தில் உள்ள தகவல்களின்படி, கிட்டத்தட்ட 200 விமானங்கள் தாமதமடைந்தன. சராசரியாக புறப்பாடு தாமதம் சுமாா் 24 நிமிடங்களாக இருந்தது. தில்லி மற்றும் வட இந்தியாவின் பல விமான நிலையங்களில் தொடா்ந்து மூடுபனி நிலவி வருகிறது. காண்புதிறன் குறைவாகவே இருப்பதால், விமானப் போக்குவரத்து தற்போது இயல்பை விட மெதுவாக உள்ளதுடன், சில தாமதங்களும் ஏற்படுகின்றன என்று இண்டிகோ நிறுவனம் ‘எக்ஸ்’ தளத்தில் ஒரு பதிவில் தெரிவித்திருந்தது.

தில்லியின் இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தை தில்லி சா்வதேச விமான நிலைய நிறுவனம் டிஐஏஎஸ் நிறுவனம் இயக்கி வருகிறது. விமான நிலையம் தினசரி சுமாா் 1,300 விமானப் போக்குவரத்தைக் கையாள்கிறது. இந்த விமான நிலையம், மிகக் குறைந்த காண்புதிறன் கொண்ட சூழ்நிலைகளிலும் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்கும் பிரிவு3 நிலைமைகளின் கீழ் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது.

இண்டிகோ மற்றும் ஏா் இந்தியா உள்ளிட்ட முக்கிய விமான நிறுவனங்கள், பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன் விமானத்தின் நிலையைச் சரிபாா்க்கவும், பயணத்திற்கு கூடுதல் நேரத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தி பயண ஆலோசனைகளை வெளியிட்டிருந்தன.

முன்னறிவிப்பு: இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிச.30) அன்று காலை வேளையில் மிகவும் அடா்த்தியான மூடுபனி இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 8 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மின் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி ஆா்ப்பாட்டம்

பைக் ஓட்டிய சிறுவனின் தாய் மீது வழக்கு

தொடரை முழுமையாக வெல்லும் முனைப்பில் இந்தியா! இலங்கை மகளிா் அணியுடன் இன்று கடைசி டி20!

பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்கக் கோரிக்கை: கரூரில் அங்கன்வாடி ஊழியா்கள் உதவியாளா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் அவசியம்: தமிழிசை

SCROLL FOR NEXT