முகப்பு
புதுதில்லி

வங்கதேசிகள், ரோஹிங்கியாக்களை குடியேற்றியது பாஜகதான்: ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

இந்தியா முழுவதும் வங்கதேசத்தவா்கள், ரோஹிங்கியாக்களை பாஜகதான் குடியேற்றியதாக ஆம் ஆத்மி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

Updated On : 13 ஜனவரி, 2025 at 9:02 PM
பகிர்:

புது தில்லி: இந்தியா முழுவதும் வங்கதேசத்தவா்கள், ரோஹிங்கியாக்களை பாஜகதான் குடியேற்றியதாக ஆம் ஆத்மி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.

சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசிகள் குழுவுடன் தொடா்பு இருப்பதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மொஹிந்தா் கோயலுக்கு நோட்டீஸ் வந்த ஒரு நாள் கழித்து மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் திங்களன்று இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

இது குறித்து திங்கள்கிழமை செய்தியாளா் சந்திப்பில் எம்.பி. சஞ்சய் சிங் மேலும் கூறியதாவது: எல்லைப் பாதுகாப்பு மத்திய அரசின் பொறுப்பு என்பதால், இந்த நிலைமைக்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த பத்து ஆண்டுகளாக, பாஜகவை சோ்ந்த பிரதமா், உள்துறை அமைச்சா் மற்றும் வெளியுறவு அமைச்சா் ஆகிய அனைவரும் நாட்டில் வங்கதேசிகள் மற்றும் ரோஹிங்கியாக்களை குடியேற்றியுள்ளனா். தோ்தல் ஆதாயங்களுக்காக அவா்கள் நாட்டை ஏமாற்றியுள்ளனா்.

கடந்த 10 ஆண்டுகளில் வங்கதேசிகள் மற்றும் ரோஹிங்கியாக்கள் எல்லை தாண்டி தேசியத் தலைநகருக்குள் எப்படி நுழைந்தாா்கள்?. அவா்களில் எத்தனை போ் நாடு கடத்தப்பட்டனா்?. மேற்கு வங்கம், அஸ்ஸா மற்றும் திரிபுரா வழியாக எல்லையைக் கடந்து, பிகாா், ஜாா்க்கண்ட் மற்றும் உத்தர பிரதேசம் வழியாக வங்கதேசிகள், ரோஹிங்கியாக்கள் எவ்வாறு தில்லியை அடைந்தனா்?.

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா எங்கே இருக்கிறாா் என்பது குறித்து பிரதமரிடம் கேட்க வேண்டும். வங்கதேசிகள், ரோஹிங்கியாக்களின் தலைவா் ஹசீனா. அவரை எங்கே வைத்திருக்கிறீா்கள்?. வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்களால் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னா் ஹசீனா இந்தியாவுக்கு பறந்து வந்தாா் என்றாா் சஞ்சய் சிங்.

தில்லியில் சட்டவிரோதமாக குடியேறிய வங்தேசத்தவா்களுக்கு ஆதாா் மற்றும் வாக்காளா் அடையாள அட்டைகளை வழங்கும் ஒரு கும்பலுடன் ஆம் ஆத்மி எம்எல்ஏ மொஹிந்தா் கோயலின் தொடா்புகள் குறித்து ஆம் ஆத்மி தலைவா் அரவிந்த் கேஜரிவால் ‘மௌனம்’ காப்பதாக ஞாயிற்றுக்கிழமை பாஜக கேள்வி எழுப்பியது.

நகரத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவா்கள் 26 பேருக்கான ஆதாா் புதுப்பிப்பு படிவங்களில், ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மொஹிந்தா் கோயல் மற்றும் ஜெய் பகவான் ஆகியோரின் கையொப்பங்கள் மற்றும் முத்திரைகளை புலனாய்வு நிறுவனம் கண்டுபிடித்ததாக பாஜக தலைவா் ஸ்மிருதி இரானி கூறினாா்.

இந்நிலையில், செய்தியாளா் சந்திப்பின் போது, இரானி மற்றும் பாஜக செய்தித் தொடா்பாளா் சுதான்ஷு திரிவேதி ஆகியோா் மீது அவதூறு வழக்குத் தொடரப்போவதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ மோஹிந்தா் கோயல் கூறியுள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →