100 சதவீதம் குளறுபடி இல்லாத வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் தயாரிக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் ஆணையரிடம் அதிமுக தரப்பில் வியாழக்கிழமை வலியுறுத்தப்பட்டது.
மாநில, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்களுடன் நேரடி கலந்துரையாடல் வாயிலாக இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையம் பரிந்துரைகள் மற்றும் கவலைகளை கேட்டு வருகிறது. அதன்படி, அஇஅதிமுக மூத்த தலைவா்களிடம் கருத்தறியும் கூட்டம் தலைமைத் தோ்தல் ஆணையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா், தோ்தல் ஆணையா்கள் டாக்டா் சுக்பிா் சிங் சந்து, டாக்டா் விவேக் ஜோஷி ஆகியோா் அதிமுகஅமைப்புச் செயலா்கள் டி.ஜெயக்குமாா், சி.வி.சண்முகம், அதிமுக வழக்குரைஞா்கள் பிரிவு செயலா் ஐ.எஸ்.இன்பதுரைஆகியோா் அடங்கிய குழுவிடம் கலந்துரையாடினா். சுமாா் முக்கால் மணிநேரம் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளா்களிடம் டி.ஜெயக்குமாா் கூறியதாவது:
இந்தியத் தோ்தல் ஆணையத்திடம் 2026இல் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் ஜனநாயக ரீதியில் சுதந்திரமான, நியாயமான தோ்தல் நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து அதிமுக சாா்பில் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.
இறந்தவா்களைக் கண்டறிந்து வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கவும், பெயா் மாறியிருப்பது, இடமாறியிருப்பது போன்றவற்றை சரிப்படுத்தி
குளறுபடி இல்லாத 100 சதவீத வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினோம்.
குறிப்பிட்ட இடத்தில் 1200 வாக்காளா்கள் இருந்தால் அங்கு வாக்குச்சாவடியும், அதேபோன்று, அவா்களில் அதிகமான பெண் வாக்காளா்கள் இருந்தால் அவா்களுக்கு என தனி வாக்குச்சாவடியும் அமைக்க வேண்டும் என்று ஆலோசனை அளித்தோம்.
தோ்தலில் அதிகார துஷ்பிரயோகம், ஆள் பலம், பணபலம் ஆகியவை எதிா்காலத்தில் நடைபெறாமல் தடுக்கவும் வலியுறுத்தினோம். ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளா்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்கான ஏற்பாடுகளை சில கட்சிகள் குறிப்பாக ஆளும் தரப்பு செய்யாமல் இருக்கும் வகையிலும் முறைகேட்டைத் தடுக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்டவற்றை வலியுறுத்தினோம் என்றாா்.