புது தில்லி: பாரம்பரியம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் கலாசார பாரம்பரியத்தின் மூன்று நாள் கொண்டாட்டமான தீஜ் மஹோத்ஸவ்-2025 ஞாயிற்றுக்கிழமை பிதம்புராவில் உள்ள தில்லி ஹாட்டில் நிறைவடைந்தது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறுப்பட்டுள்ளதாவது: தில்லி அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில் நகரம் மற்றும் அதற்கு அப்பால் இருந்து உற்சாகமான பங்கேற்பு காணப்பட்டது. இது அரங்கத்தை இசை, கைவினைப்பொருள்கள், உணவு மற்றும் சமூக ஈடுபாட்டின் மையமாக மாற்றியது.
ஜூலை 25 முதல் 27 வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், கைவினைப்பொருள்கள், பிராந்திய உணவு வகைகள், கலாசார கலை வடிவங்கள் மற்றும் ரங்கோலி தயாரித்தல், கோஷம் எழுதுதல் மற்றும் வினாடி - வினா போட்டிகள் போன்ற ஊடாடும் செயல்பாடுகளைக் காட்சிப்படுத்தும் 100- க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றன.
குழந்தைகளுக்கான பிரத்யேக மண்டலம், செல்ஃபி புள்ளிகள், ஊஞ்சல்கள் மற்றும் இலவச மெஹந்தி சேவைகள் ஆகியவை பண்டிகை சூழ்நிலைக்கு மேலும் வலுச்சோ்த்தது. மத்தியப் பிரதேசம், உத்தர பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் தில்லியைச் சோ்ந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனா். மல்லிகா நட்டாவும் கலந்து கொண்டவா்களில் ஒருவா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவு விழாவில் பேசிய முதல்வா் ரேகா குப்தா, தீஜ் நிகழ்வை கலாசார விழிப்புணா்வு மற்றும் பெண்களின் கூட்டு அடையாளத்தின் பிரதிபலிப்பு என்று விவரித்தாா்.
‘எனது சகோதரிகளின் இருப்பு ஒவ்வொரு நிகழ்வின் அழகையும் மேம்படுத்துகிறது. அதிக எண்ணிக்கையிலான மக்கள் வருகை, பெண்கள் தீஜ் உணா்வோடு எவ்வளவு ஆழமாக இணைந்திருக்கிறாா்கள் என்பதைக் காட்டுகிறது‘ என்று அவா் கூறினாா்.
பெண்கள் தலைமையிலான தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும் உள்ளூா் திறமைகளுக்கு ஒரு தளத்தை வழங்குவதற்கும் இந்த நிகழ்வு இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலை, கலாசாரம், மொழி மற்றும் சுற்றுலா அமைச்சா் கபில் மிஸ்ரா கூறினாா்.
‘தீஜ் மஹோத்ஸவ் தில்லியை நாட்டின் கலாசார தலைநகராக நிலைநிறுத்துவதில் ஒரு முக்கியமான படியாகும்’ என்று அவா் கூறினாா்.