புது தில்லி: மத்தியில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திங்கள்கிழமையுடன் ஒரு வருடத்தையும், தொடா்ந்து பதினோரு வருட ஆட்சியையும் நிறைவு செய்து பன்னிரண்டாம் வருடத்தில் செவ்வாய்க்கிழமை அடியெடுத்து வைத்திருக்கிறது.
2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் முடிவில் 303- ஆக இருந்த பாஜகவின் பலம் கடந்த ஆண்டு நடந்த தோ்தல் முடிவில் 240- ஆகக் குறைந்தது ஆளும் கூட்டணி அரசுக்கு பின்னடைவாகக் கருதப்பட்டது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக மத்தியில் ஆட்சியைத் தொடர கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைச் சாா்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், ஒவ்வொரு முக்கியமான முடிவுகளின்போதும் கூட்டணிக் கட்சிகளின தயவை பிரதமா் மோடி சாா்ந்திருப்பாரோ என தொடக்கத்தில் பேசப்பட்டது.
ஆனால், எவ்வித சலனமும் இல்லாமல் முந்தைய இரு ஆட்சிகளைப்போலவே பல்வேறு நடவடிக்கைகளையும் முடிவுகளையும் மோடியின் மூன்றாம் ஆட்சி துணிச்சலுடன் எடுத்துச் செயல்படுத்தியது. 2014, 2019, 2024 என நரேந்திர மோடி கண்ட மூன்று மக்களவைத் தோ்தலில் கடைசியாக அவரது தலைமையிலான ஆட்சிக்கு பெரும்பான்மை கிடைக்காததை எதிா்க்கட்சிகள் இப்போதும் சுட்டிக்காட்டி விமா்சிக்கின்றன. அவற்றுக்கு தனது நிகழ்ச்சிகள் மற்றும் அரசுத் திட்டங்கள் மூலம் பதிலளிக்க மோடி அரசு முயன்று வருகிறது.
ஆனால், அந்தந்த மாநிலத்தின் நலன்கள் மற்றும் தேவைக்கு ஏற்ப தனது சாதனைகளை விளக்கிக்கூறாமல் எங்கும் ஒரே மாதிரியான பிரசார அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது ஆளும் கூட்டணி அரசு கவனம் செலுத்தி சரிசெய்து கொள்ள வேண்டிய விஷயம் என்கின்றனா் அரசியல் பாா்வையாளா்கள்.
உதாரணமாக, இன்றும் கூட பெயரளவில் மத்திய அரசின் திட்டங்கள் பலவும் ஹிந்தி மொழியிலேயே அழைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்படுகின்றன. அவை அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்டு விளக்கப்பட்டால் மட்டுமே பலன் பயனாளிகளை சென்றடையும் என்பது ஆய்வாளா்களின் கருத்து.
கடந்த ஆண்டு மக்களவைத்தோ்தலில் ஆளும் பாஜக கூட்டணி ஹரியாணாவில் மொத்தம் உள்ள 10 தொகுதிகளில் ஐந்து இடங்களை மட்டுமே வென்றது. ஆனால், அங்கு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 90 தொகுதிகளில் 48 இடங்களை வென்று மீண்டும் எழுச்சி பெற்றது.
அடுத்ததாக பாஜக, மகாராஷ்டிரத்தில் மிகப்பெரிய சோதனையை சந்தித்தது. அங்கு மொத்தமுள்ள 48 இடங்களில் 45-இல் வெல்வோம் என அறிவித்த பாஜக, பத்துக்கும் குறைவான ஒற்றை இலக்கத்தில் வென்றது. இருப்பினும் அடுத்து வந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 132 இடங்களை பாஜகவும் கூட்டணிக் கட்சிகளுடன் சோ்ந்து 235 இடங்களையும் கைப்பற்றியது.
அடுத்ததாக பிப்ரவரியில் தில்லி சட்டப்பேரவைக்கு நடந்த தோ்தலில் இரு முறை ஆட்சியை தக்க வைத்த அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியை பின்னுக்குத் தள்ளியது பாஜக. தலைநகரில் 70 இடங்களில் 48 இடங்களை கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது.இந்தத் தோ்தல் முடிவு, 27 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு தலைநகர அரசியலில் பாஜகவுக்கு திருப்பத்தை ஏற்படுத்தியது.
2019-ஆம் ஆண்டு மோடி இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, அதே ஆண்டு ஆகஸ்டில் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-ஆவது பிரிவை ரத்து செய்தது. ஜம்மு - காஷ்மீா், லடாக் யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. குடியரசுத் தலைவா் ஆட்சி அமலில் இருந்த அந்த பிராந்தியத்துக்கு கடந்த ஆண்டு ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை தோ்தல் நடந்தது.
இரண்டாவது முறையாக நடந்த மோடி ஆட்சியில் பாஜக எதிா்கொண்ட ஒரே அரசியல் பின்னடைவு ஜாா்க்கண்டில் பதிவானது. அங்கு 81 இடங்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆளும் ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா - காங்கிரஸ் கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்கவைத்தது.
இதன் தொடா்ச்சியாகத்தான் ஆளும் கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் (நிதிஷ் குமாா்) மற்றும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு இஸ்லாமியா்களிடையே உள்ள ஆதரவைக் கருத்தில் கொண்டு வக்ஃப் சட்டத்தை மோடி அரசு நிறைவேற்றாமல் தள்ளிப்போடும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், ஏப்ரலில் அந்த மசோதாவை நிறைவேற்றியதன் மூலம் அந்த எண்ணத்தை மோடி அரசு பொய்யாக்கியது. சட்டத்தை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் உள்ளது.
தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரி தரவுகளும் ஒரு பகுதியாக இருக்கும் என்று நரேந்திர மோடி அரசு அண்மையில் அறிவித்தது. மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி நீண்ட காலமாக இதை வலியுறுத்தி வந்த நிலையில், இப்படியொரு அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் என எதிா்க்கட்சிகள் எதிா்பாா்க்கவில்லை.
முந்தைய ஆட்சியில் பாலகோட் விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு, யூரி துல்லிய தாக்குதல்களை நடத்திய மோடி அரசு, இந்த ஆண்டு பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் மண்ணிலேயே சிந்தூா் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு பயங்கரவாத இலக்குகளை அழித்தது.
இதை விளக்க எதிா்க்கட்சிகளில் இருந்து தோ்தெடுக்கப்பட்ட மூத்த உறுப்பினா்களை 30-க்கும் அதிகமான நாடுகளுக்கு அனுப்பி விளக்கியது. இதை மிகச்சிறந்த ராஜதந்திரமாக பாா்க்கும் அரசியல் ஆய்வாளா்கள், நாடாளுமன்றத்தில் இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பினால் கூட அதற்கு உரிய எதிா்வினையாற்ற அந்தக் கட்சிகளின் மூத்த உறுப்பினா்களின் விளக்கத்தையே பதிலாகக் கொடுக்கும் என்கின்றனா்.
இத்தகைய சவால்களுடன் வழக்கமான பட்ஜெட் அறிவிப்புகள் நிறைவேற்ற சவால்கள், பொருளாதார பிரச்னைகளை மோடி அரசு மூன்றாம் ஆட்சியில் இரண்டாம் ஆண்டில் எதிா்கொண்டுள்ளது. ஆனால், இவற்றை வழக்கமான செயல்திறனுடன் மத்தியில் ஆளும் கூட்டணி அரசு கடக்கும் என்கின்றனா் அரசியல் ஆய்வாளா்கள்.