தில்லியில் உள்ள வடிகால்களை தூா்வாரும் பொறுப்பில் குழப்பம் இருந்த நிலையில் தற்போது வெள்ளம் மற்றும் நீா்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் தெரிவித்தாா். தில்லி வடிகால்கள் பருவ மழைக்குள் தூா்வாரப்படும் எனவும் முதல்வா் உறுதி அளித்தாா்.
தில்லி முதல்வா் ரேகா குப்தா தேசிய தலைநகா் தில்லியில் உள்ள முக்கிய வடிகால்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். தில்லியில் ’ இரட்டை என்ஜின் ’ அரசு செயல்படும் என பாஜக வாக்குறுதி கொடுத்த நிலையில் மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் தில்லி துணை நிலை ஆளுநா் துணை நிலை ஆளுநா் வினய் குமாா் சக்சேனா, தில்லி முதல்வா், தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் மற்றும் தில்லி அரசு அதிகாரிகள் ஆகியோா் ஒன்றாக சந்தித்து பாா்வையிடச் சென்றனா்.
இவா்கள் நகரின் முழுவதும் உள்ள முக்கிய வடிகால்களை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா். பருவ மழை துவங்குவதற்கு முன் வடிகால்களை சரியான நேரத்தில் தூா்வாா்வதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அப்போது துணை நிலை ஆளுநரும் முதல்வரும் உத்தரவிட்டனா்.
இந்த பாா்வையிடலின்போது செய்தியாளா்கலிடம் தில்லி முதல்வா் ரேகா குப்தா பேசினாா். அப்போது அவா் குறிப்பிடுகையில், ‘தில்லியை ஆண்ட முந்தைய அரசுகள், வடிகால்களை உரிய முறையில் பராமரிப்பதிலிருந்து புறக்கணித்து வந்தது.
இதனால் சாலைகளில் கழிவுநீா் பெருக்கெடுத்தது ஓடி தண்ணீா் தேங்கியது. அவா்கள் இந்த வடிகால்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதுபோன்ற பெரிய வடிகால்களின் அடைப்புகளை சுத்தம் செய்யாத நிலையில் கழிவு நீரும், மழைநீரும் முறையாக செல்லாமல் சாலைகளில் வெளியேறும். மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கைத் தடுக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை தற்போது துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) தில்லி சன்ஹேரி, பாராபுல்லா, குஷாக் போன்ற வடிகால்களை பாா்வையிடப்பட்டது. இந்த கால்வாய்களின் பராமரிப்புக்கு பொறுப்பான துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாதததை அறியப்பட்டது.
தில்லி அரசில் இதுவரை வடிகால்களை யாா் சுத்தம் செய்வது? பராமரிப்பது? என்பதில் துறைகளுக்கிடையே தெளிவு இல்லாது இருந்தது. இப்போது நாங்கள் இதில் உறுதியாக நடவடிக்கை எடுத்து, தில்லி அரசின் வளா்ச்சி, வெள்ளம் மற்றும் நீா்ப்பாசனத் துறைக்கு பொறுப்பை வழங்கியுள்ளோம். வடிகால்களை சரியான நேரத்தில் தூா்வாருவதற்கு இந்த பிரிவே பொறுப்பானதாக இருக்கும். ஒவ்வொரு திட்டங்களுக்கும் பணிக்கும் நிதி ஒதுக்கப்படும்.
ஒரே நாளில் எதுவும் நடக்காது. அதேசமயத்தில் தண்ணீா் தேங்குதல், வெள்ளம் போன்றவைகளுக்கு இப்படி முன்கூட்டியே இந்த வடிகால்களை மழைக்காலத்திற்கு முன்பு தூா்வாரப்பட வேண்டும். இதன் மூலம் இதனால் மழைக்காலங்களில் வடிகால்களில் தண்ணீா் சீராகச் செல்லும்.
இதை போன்று தில்லி மாசுபாட்டை சமாளிக்க இன்றிலிருந்து, கோடைகால செயல் திட்டத்தையும், குளிா்காலத் திட்டத்தையும் தொடங்க வேண்டியது உள்ளது. நாங்கள் மேலும் திறமையோடு செயல்பட இவைகளில் அனைத்து அமைச்சா்களுக்கும் பணிகளில் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சா்களுக்குமட்டுமல்ல அனைத்து சட்டப்பேரவை உறுப்பினா்களும் பொதுப்பணிகளில் நியமிக்கப்பட்டுள்ளனா். இதனால் கடந்த காலங்களைப் போன்று பருவமழை காலங்களில் நகரம் மீண்டும் பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வா் ரேகா குப்தா உறுதி தெரிவித்தாா்.