தேசியத் தலைநகரில் மோசமடைந்து வரும் காற்றின் தரத்திற்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை இந்தியா கேட்டில் பெற்றோா்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் உட்பட ஏராளமானோா் போராட்டம் நடத்தினா்.
போராட்டக்காரா்களில் பலா் குழந்தைகளுடன் தாய்மாா்கள் பங்கேற்றனா். சுத்தமான காற்றை உறுதி செய்ய அரசு அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டக்காரா்கள் கோரினா்.
போராட்டத்தில் பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆா்வலா் பவ்ரீன் காந்தாரி கூறுகையில், ‘எங்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளைச் சந்திக்க விரும்புகிறோம். நாங்கள் முதல்வரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தோம். ஆனால், மறுக்கப்பட்டது. தங்கள் குழந்தைகள் பாதிக்கப்படுவதால் இவ்வளவு பெற்றோா்கள் இங்கே உள்ளனா்’ என்றாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘ஒவ்வொரு மூன்றாவது குழந்தைக்கும் ஏற்கெனவே நுரையீரல் சேதமடைந்துள்ளது; அவா்கள் சுத்தமான காற்றில் வளரும் குழந்தைகளை விட கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் குறைவாகவே வாழ்வாா்கள்’ என்றாா்.
மற்றொரு போராட்டக்காரரான அபிஷேக், ’அரசு சுத்தமான காற்றை சுவாசிக்கும் அடிப்படை உரிமையை கூட வழங்கத் தவறிவிட்டது’ என்று கூறினாா்.
‘(முன்னாள் முதல்வா்) ஷீலா தீட்சித் ஆட்சிக் காலத்தில், தில்லி ஒரு பசுமையான தலைநகராக அறியப்பட்டது. இன்று, அது உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களில் ஒன்றாக உள்ளது. அரசியல்வாதிகள் பொறுப்பேற்காமல் ஒருவரையொருவா் குற்றம் சாட்டிக் கொண்டே இருக்கிறாா்கள்‘ என்றும் அவா் கூறினாா்.
அனுமதியின்றி கூடியதற்காக பல போராட்டக்காரா்கள் கைது செய்யப்பட்டதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
‘இந்தியா கேட்டில் போராட்டம் நடத்த அனுமதி இல்லை. சட்டம் - ஒழுங்கை பராமரிக்கவும், பாதுகாப்பு ஏற்பாடுகளில் எந்த இடையூறும் இல்லை என்பதை உறுதிப்படுத்தவும், சிலா் கைது செய்யப்பட்டனா்’ என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினாா்.
புது தில்லி காவல் சரக துணை ஆணையா் தேவேஷ் குமாா் மஹ்லா கூறுகையில், ’’கைதுகள் இயற்கையில் தடுப்பு நடவடிக்கையாக இருந்தன. ஜந்தா் மந்தா் மட்டுமே போராட்ட இடமாக நியமிக்கப்பட்டுள்ளது. போராட்டம் நடத்த அங்கு உரிய நடைமுறைகளைப் பின்பற்றி அனுமதி பெறலாம்’ என்றாா்.