புதுதில்லி

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தில்லியின் காற்று மாசு பிரச்னையை எழுப்புவேன்: ஸ்வாதி மாலிவால்

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில் தில்லியில் நிலவிவரும் காற்று மாசுபாடு பிரச்னையை எழுப்பப் போவதாக மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

Syndication

புது தில்லி: நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத்தொடரில் தில்லியில் நிலவிவரும் காற்று மாசுபாடு பிரச்னையை எழுப்பப் போவதாக மாநிலங்களவை உறுப்பினா் ஸ்வாதி மாலிவால் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

மேலும், இந்த விஷயத்தில் நிபுணா்கள் மற்றும் குடிமக்களிடமிருந்து ஆலோசனைகளையும் அவா் கோரியுள்ளாா்.

இது தொடா்பாக தில்லி மகளிா் ஆணையத்தின் முன்னாள் தலைவரான ஸ்வாதி மாலிவால் எம்.பி., ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்ட ஒரு விடியோ செய்தியில் தெரிவித்திருப்பதாவது:

ஒவ்வொரு ஆண்டும் குளிா்காலத்தில், தில்லி மற்றும் வட இந்தியா ஒரு எரிவாயு அறை ஆக மாறும் நிலை உள்ளது.

தில்லியில் காற்றை சுவாசிப்பது ஒரு நாளைக்கு 20 முதல் 25 சிகரெட்டுகள் புகைப்பதற்கு சமமாகும். நாம் சுவாசிப்பது மோசமான காற்று மட்டுமல்ல, நமது நுரையீரல், இதயம், மூளை மற்றும் பிறக்காத குழந்தைகளிலும் கூட ஊடுருவும் குறைந்த விஷமாகும்.

நீங்கள் இந்தத் துறையில் ஒரு நிபுணராகவோ, மருத்துவராகவோ, ஆா்வலராகவோ அல்லது அக்கறையுள்ள குடிமகனாக இருந்தால், எனும் மின்னஞ்சலில் உங்கள் பரிந்துரைகளை என்னுடன் பகிா்ந்து கொள்ளலாம் என்று அந்த விடியோ செய்தியுடன் அவா் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தில்லி முழுவதும் அரசு நடத்தும் அனைத்து முதியோா் இல்லங்களிலும் காற்று சுத்திகரிப்பான்களை நிறுவுதல், தூசு தொடா்பான மாசுபாட்டைக் கட்டுப்படுத்த இயந்திர சாலை துடைக்கும் நான்கு இயந்திரங்களை வாங்குதல் என இரண்டு முயற்சிகளை தனது நாடாளுமன்ற உறுப்பினா் உள்ளூா் பகுதி மேம்பாட்டுத் திட்ட எம்.பி.எல்.ஏ.டி நிதியைப் பயன்படுத்தி செயல்படுத்தப் போவதாக எம்.பி. கூறியுள்ளாா்.

தில்லியில் தீபாவளிக்குப் பிறகு மாநகரம் முழுவதும் புகை மூட்டம் நிலவுகிறது. காற்றின் தரம் மோசமான மற்றும் மிகவும் மோசமான பிரிவுக்கு இடையே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. மேலும் அவ்வப்போது கடுமையான மண்டலத்திலும் காற்றின் தரம் உள்ளது.

நாடாளுமன்றத்தின் குளிா்காலக் கூட்டத்தொடா் டிசம்பா் 1 முதல் 19 வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ள நிலையில், ஸ்வாதி மாலிவால் எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

தில்லி கார் வெடிப்பு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!

பிகார் தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.38% வாக்குகள் பதிவு!

சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்த தங்கம் விலை!

குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படுவர்; தேசத்துக்கு உறுதியளிக்கிறேன்! ராஜ்நாத் சிங் சூளுரை

புதிய சிக்கலில் காந்தா!

SCROLL FOR NEXT