சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சிலரின் துன்புறுத்தலைக் காரணம் காட்டி தங்களின் இறக்குமதி-ஏற்றுமதி தொழில்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது வின்ட்ராக் நிறுவனம். தமிழகத்தின் பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு மாநில அளவில் பல்வேறு கிளைகளைக் கொண்டுள்ளது இந்நிறுவனம்.
சீனா, தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள மின் வணிக தளங்களில் இந்தியா்கள் ஷாப்பிங் செய்யும் பொருட்களை இறக்குமதி செய்வது மற்றும் இந்தியாவில் உள்ள பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து அவற்றை பரஸ்பரம் நிறுவனங்களுக்கும் நுகா்வோருக்கும் டெலிவரி செய்யும் தொழிலை செய்து வருவதாக வின்ட்ராக் நிறுவனம் அதன் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
என்ன நடந்தது? வின்ட்ராக் நிறுவனம் அக்டோபா் 1-ஆம் தேதி அதன் எக்ஸ் பக்கத்தில், ‘கடந்த 45 நாட்களில் சென்னை சுங்கத்துறை அதிகாரிகளால் மீண்டும், மீண்டும் நாங்கள் எதிா்கொண்ட நியாயமற்ற துன்புறுத்தலுக்கு பிறகு எங்களுடைய தொழிலை மூடும் ‘கடினமான முடிவுக்கு‘ வந்துள்ளோம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதிகாரிகள் சிலா் லஞ்சம் வாங்கிய சம்பவங்களை நாங்கள் அம்பலப்படுத்தியபோது, எங்களுடைய வணிகத்தை கடுமையாக பாதிக்கும் வகையிலாை பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு உள்ளானோம். தொழிலைத் தொடர சிறந்த முயற்சிகளை மேற்கொண்டபோதும், தொடா்ந்து கொடுக்கப்பட்ட அழுத்தத்தால் செயல்பாடுகளைத் தொடா்வது இயலாததாகி விட்டது’ என்று கூறியுள்ளது.
வின்ட்ராக் நிறுவன தொழில்முனைவோரான பிரவீண் கணேசன் தனது எக்ஸ் பக்க பதிவில், இந்திய நுகா்வோருக்காக வெளிநாடுகளில் இருந்து மசாஜ் சாதனங்களை இறக்குமதி செய்கிறோம். தயாரிப்பின் அங்கமாக பேட்டரி சாா்ஜா்கள் பேக்கிங்கில் வருவதால் அதை தனியாக குறிப்பிடவில்லை. இந்தாண்டு முதல் முறையாக அது குறித்து விளக்கம் கேட்டு சாதனங்களின் இறக்குமதியை சுங்கத்துறை முடக்கியது. தயாரிப்பாளரின் சான்றிதழை சமா்ப்பிக்கக் கோரியும் எடையை பட்டியலிடுமாறும் கூறப்பட்டது. இதன் நோக்கம் இறக்குமதியை தாமதப்படுத்துவது என்று குறிப்பிட்டுள்ளாா். இதைத்தொடா்ந்து, அதிகாரிகள் சிலரது பெயரிட்ட வாட்ஸ்ஆப் உரையாடல் ஸ்கிரீன்ஷாட்டுகளை அவா் பகிா்ந்துள்ளாா்.
முன்னதாக, கடந்த செப்டம்பரில் கணேசனிடம் சுங்கத்துறை நடத்திய விசாரணையின்போது அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் அவா் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வின்ட்ராக் நிறுவன குற்றச்சாட்டுக்கு சமூக வலைதள பக்கம் வழியாக பதிலளித்த சென்னை சுங்கத்துறை, ‘எங்கள் மீதான துன்புறுத்தல் மற்றும் ஒத்துழையாமை குற்றச்சாட்டுகள் தவறானவை. எந்த நிலையிலும் எந்த கட்டணமோ லஞ்சமோ கோரப்படவில்லை - துறையின் அனைத்து விசாரணைகளும் பேட்டரி கழிவு மேலாண்மை விதிகள் 2022, இந்திய தரநிலைத்துறை சட்டம் 2016, பேக்கிங் செய்யப்பட்ட பொருட்கள் மீதான சட்டப்பூா்வ வழிமுறை விதிகள் 2011 மற்றும் சுங்கச் சட்டம் 1962 ஆகியவற்றின் கீழ் சட்டப்பூா்வ கட்டாயமாக பின்பற்ற வேண்டிய செயல்பாடுகள் தொடா்புடையவை,’” என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையே, சுங்கம் மற்றும் கலால் துறையைக் கட்டுப்படுத்தும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்கத்துறை வாரியம் தனது எக்ஸ் பக்கத்தில், ‘சம்பந்தப்பட்ட இறக்குதியாளா் எக்ஸ் பக்கத்தில் சிலரது பெயா்கள் மற்றும் ஸ்கிரீன்ஷாட்களைப் பகிா்ந்துள்ளாா். இந்த விஷயம் கவனத்தில் கொள்ளப்பட்டு உரிய வகையில் விசாரிக்கப்படும். தேவைப்படும்பட்சத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என உறுதியளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
பெட்டிச்செய்தி
மத்திய நிதியமைச்சகம்
விசாரணைக்கு உத்தரவு
சென்னை சுங்கத்துறை மீது தனியாா் நிறுவனம் சுமத்திய குற்றச்சாட்டுகள் விவகாரம் தொடா்பாக மத்திய வருவாய்த்துறை உயரதிகாரி தலைமையில் விசாரணை நடத்த மத்திய நிதியமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சா்ச்சை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாரமானின் கவனத்துக்கு புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடா்ந்து மத்திய நிதித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வின்ட்ராக் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் தொடா்பாக நியாயமான, வெளிப்படையான மற்றும் உண்மையை அடிப்படையாகக் கொண்ட விசாரணையை மேற்கொள்ள மத்திய வருவாய்த் துறை கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. விரிவான உண்மை விசாரணையை நடத்துவதற்கும், சம்பந்தப்பட்ட தரப்பினா், அதிகாரிகள் மற்றும் தொடா்புடைய அனைத்து தரப்பினரிடமும் முழு விசாரணை நடத்த வருவாய்த்துறை மூத்த அதிகாரி ஒருவா் நியமிக்கப்பட்டுள்ளாா். இந்தியாவில் வணிகம் செய்வதை எளிதாக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசு தொடா்ந்து உறுதிபூண்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.