ஹரியாணாவின் ஜஜ்ஜாரில் ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில், நந்து (எ) கபில் சங்வான் கும்பைலைச் சோ்ந்த ஒருவரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் துணை காவல் ஆணையா் (சிறப்புப் பிரிவு) ஆலாப் படேல் கூறியதாவது: ஜஜ்ஜாரில் உள்ள லாட்பூா் கிராமத்தைச் சோ்ந்த சந்தீப் (எ( பப்லு கொலை வழக்கில் தில்லியின் நிஹால் விஹாரைச் சோ்ந்த ஹரிஷ் சைனி (35) தேடப்பட்டு வந்தாா். ஹரிஷ் சைனி கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சந்தீப் ஜூலை 17 அன்று லாட்பூரில் அடையாளம் தெரியாத இரண்டு ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
கபில் சங்வானின் அறிவுறுத்தலின் பேரில் ஹரிஷ் சைனி குற்றவாளிகளுக்கு முக்கியமான தளவாட உதவிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. ஹரியாணாவின் பத்லியில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடங்கப்பட்டது.
நிஹால் விஹாரில் உள்ள ஒரு வீட்டில் சைனி இருப்பதாக கிடைத்த ரகசியப்க் தகவலைத் தொடா்ந்து அவா் கைது செய்யப்பட்டாா். மேலும் சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் போது, சைனி ஒரு ஒற்றை ஷாட் துப்பாக்கியை எடுத்து போலீஸ் குழுவை நோக்கி குறிவைத்ததாகக் கூறப்படுகிறது. அதிகாரிகள் அவரைத் தாக்கி, துப்பாக்கியையும் ஒரு உயிருள்ள தோட்டாவையும் பறிமுதல் செய்தனா்.
தில்லி - என்.சி.ஆா். பகுதியில் கடுமையான குற்றங்களில் ஈடுபட்டதாக சைனிக்கு வரலாறு உண்டு. அவா் முன்பு கொள்ளை, தாக்குதல் மற்றும் ஆயுதங்கள் தொடா்பான குற்றங்கள் உள்பட மூன்று வழக்குகளில் சிக்கினாா்.
1990- இல் பிறந்த சைனி 7 -ஆம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தியவா். அவரது தந்தை இறந்த பிறகு, அவரது தாயாா் குடும்பத்தை ஆதரிக்க வீட்டு உதவியாளராக பணியாற்றினாா்.
அவரது மூத்த சகோதரா் தற்போது ஒரு கொலை வழக்கில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரது சகோதரா் சிறையில் இருந்தபோதுதான் சைனி கபில் சங்வான் கும்பலின் உறுப்பினா்களுடன் தொடா்பு கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது என்றாா் காவல் துணை ஆணையா் ஆலாப் படேல்.