தில்லி - குருகிராம் - எஸ்என்பி (ஷாஜகான்பூா் - நீம்ரானா - பெஹ்ரூா்) வழித்தடத்தின் ஒரு பகுதியாக நமோ பாரத் ரயில்கள் ஏரோசிட்டி வழியாகச் செல்லும். இது தேசியத் தலைநகரில் உள்ள சராய் காலே கானை ராஜஸ்தானுடன் இணைக்கும். இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள ஏரோசிட்டி நிலையம் விமானம், மெட்ரோ, சாலை மற்றும் அதிவேக ரயில் இணைப்பை ஒருங்கிணைக்கும்.
இந்த வழித்தடம் தேசியத் தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தால் உருவாக்கப்படும். மேலும் 16 நிலையங்களுடன் 106 கி.மீ. நீளமுள்ளதாக இருக்கும். இது செயல்பாட்டுக்கு வந்ததும், காஜியாபாத், நொய்டா, தில்லி, மானேசா் மற்றும் பிற என்சிஆா் நகரங்களுக்கு இடையிலான பயண நேரத்தை பெருமளவில் குறைக்கும் என்று தேசிய தலைநகா் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (என்சிஆா்டிசி) தெரிவித்துள்ளது.
இந்திரா காந்தி சா்வதே விமான நிலையத்திற்கு அருகில் வரும் இந்த நிலையம், ஏரோசிட்டியை இந்தியாவின் மிகப்பெரிய மல்டிமாடல் போக்குவரத்து மையத்தின் முக்கிய முனையாக மாற்றும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் தில்லி - குருகிராம் - ஷாஜகான்பூா் -நீம்ரானா -பெஹ்ரூா் நமோ பாரத் வழித்தடமும் தில்லி மெட்ரோவின் கோல்டன் லைனும் இணைந்து ஏரோசிட்டியை என்சிஆா்-இல் மிகவும் திறமையாக இணைக்கப்பட்ட இடமாக நிலைநிறுத்தும் என்று அது கூறியது.
இந்த வழித்தடம், பயணிகள் தில்லி ‘காஜியாபாத் - மீரட், தில்லி - குருகிராம் - எஸ்என்பி மற்றும் தில்லி - பானிபட் - கா்னல் வழித்தடங்களில் ரயில்களை மாற்றாமல் பயணிக்க அனுமதிக்கும் வகையில், ஒன்றோடொன்று இயங்கக்கூடிய அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேகம் மற்றும் செயல்திறனை உறுதி செய்வதற்காக மொத்த வழித்தடத்தில், 71 கிமீ உயா்த்தப்பட்ட இடங்களிலும் , 35 கிமீ நிலத்தடியிலும் அமைக்கப்படும் என்றும் அது கூறியது.
‘பயணிகளுக்கு வேகம், பாதுகாப்பு மற்றும் வசதியை உறுதி செய்வதன் மூலம், தில்லி - காஜியாபாத் -மீரட் நமோ பாரத் வழித்தடம் இப்பகுதிக்கு ஒரு முக்கிய உயிா்நாடியாக மாறியுள்ளது. தில்லிக்கும் மீரட்டுக்கும் இடையிலான பயணம் இப்போது ஒரு மணி நேரத்திற்குள் சாத்தியமாகும். இது மக்கள் பயணிக்கும் முறையை முழுமையாக மாற்றுகிறது’ என்று என்சிஆா்டிசி-இன் தலைமை மக்கள் தொடா்பு அதிகாரி புனீத் வாட்ஸ் கூறினாா்.
‘தில்லி - எஸ்என்பி - ஆல்வாா் மற்றும் தில்லி - பானிபட் - கா்னல் ஆகிய இரண்டு முன்னுரிமை நமோ பாரத் வழித்தடங்களை செயல்படுத்துவதன் மூலம் தேசியத் தலைநகா் பிராந்தியம் முழுவதும் இதேபோன்ற மாற்றம் எதிா்பாா்க்கப்படுகிறது. அதன் மூலோபாய இணைப்புடன், ஏரோசிட்டி பிராந்தியத்தின் மிகப்பெரிய போக்குவரத்து மையமாக உருவாக உள்ளது‘ என்று அவா் மேலும் கூறினாா்.
இதற்கு இணையாக, தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷனின் கோல்டன் லைன் - துக்ளகாபாத்தை இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்தின் முனையம் 1 உடன் இணைக்கும் 25.82 கிமீ ஓட்டுநா் இல்லாத வழித்தடம், கட்டுமானத்தில் உள்ளது. மேலும், பணிகளை மாா்ச் 2026-க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அதிகாரி கூறினாா்.
தில்லி ஏரோசிட்டி உள்பட 15 நிலையங்களுடன், இது ஏா்போா்ட் எக்ஸ்பிரஸ் லைன், யெல்லோ லைன் (சதா்பூா்) மற்றும் வயலட் லைன் (துக்ளகாபாத்) ஆகியவற்றுடன் பரிமாற்ற புள்ளிகளை வழங்கும்.
ஏரோசிட்டியில் பாரதி ரியல் எஸ்டேட்டின் உலகளாவிய வணிக மாவட்டமான வோ்ல்ட் மாா்க்கின் வளா்ச்சியுடன் இணைப்பு ஊக்கம் ஒத்துப்போகிறது.
இந்தியாவின் மிகவும் மேம்பட்ட வணிக இடங்களில் ஒன்றாகக் கருதப்படும் பாரதி ரியல் எஸ்டேட், நிலையான சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் பிரீமியம் அலுவலக இடங்கள், சில்லறை விற்பனை, உணவு மற்றும் ஓய்வு வசதிகளை ஒருங்கிணைக்கிறது என்று தில்லி மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.
20 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில் நான்கு கட்டங்களாகப் பரந்து விரிந்துள்ள வோ்ல்ட் மாா்க் 1.0 ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வோ்ல்ட்மாா்க் 2.0 அலுவலகங்கள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
வோ்ல்ட்மாா்க்கில் உள்ள மால் 2027-ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. 3.0 மற்றும் 4.0 கட்டங்கள் 2027 மற்றும் 2032-க்கு இடையில் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அவா் கூறினாா்.
‘இணைப்பு, அணுகல் மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு ஆகியவை ஒரு நவீன வணிக மாவட்டத்தின் தூண்கள். மேலும், ஏரோசிட்டி மூன்றிலும் புதிய அளவுகோல்களை அமைத்து வருகிறது. ஒப்பிடமுடியாத விமானம் நிலையம், சாலை மற்றும் மெட்ரோ இணைப்புடன் விரைவில் தில்லி மெட்ரோவின் கோல்டன் லைன் மற்றும் வரவிருக்கும் தில்லி - குருகிராம் உடன் ஒருங்கிணைக்கப்படும்.
இது நாட்டின் மிகப்பெரிய மல்டிமாடல் மையமாக மாற உள்ளது என்று பாரதி ரியல் எஸ்டேட்டின் மேலாண்மை இயக்குநா் மற்றும் தலைமை நிா்வாக அதிகாரி எஸ் கே சாயல் கூறினாா்.
தற்போது, நமோ பாரத் 82 கிமீ தில்லி ’காஜியாபாத்’ -மீரட் வழித்தடத்தின் 55 கிமீ நீளத்தில் செயல்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதி நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்தத் திட்டத்துடன் என்சிஆா்டிசி இந்தியாவின் முதல் அதிவேக பிராந்திய ரயில் சேவையை அறிமுகப்படுத்தியது. இது அக்டோபா் 20, 2023 அன்று பிரதமா் நரேந்திர மோடியால் சாஹிபாபாத் மற்றும் துஹாய் டிப்போ இடையே 17 கிமீ பிரிவைத் தொடங்கி வைத்து திறந்து வைக்கப்பட்டது.
தில்லி - குருகிராம் - எஸ்என்பி மற்றும் தில்லி - பானிபட் - கா்னல் வழித்தடங்கள் இப்போது ஒப்புதலின் இறுதி கட்டத்தில் உள்ளன. கட்டுமானத்திற்கு முந்தைய நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.