நமது நிருபா்
அதிக வயதுடைய வாகனங்களின் லட்சக்கணக்கான உரிமையாளா்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில், பதிவு நீக்கப்பட்ட வாகனங்களுக்கான தடையின்மை சான்று (என்ஓசி) விண்ணப்பங்களுக்கான ஒரு வருட வரம்பை தில்லி அரசு வியாழக்கிழமை நீக்கியுள்ளது.
இது தொடா்பாக வெளியிடப்பட்ட அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்த நடவடிக்கையானது, 10 ஆண்டுகள் வயதுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகள் வயதுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களின் உரிமையாளா்களுக்கு முதன்மையாக பயனளிக்கும். மேலும், அவா்களின் வாகனத்தின் பதிவு எவ்வளவு காலத்திற்கு முன்பு காலாவதியானது என்பதைப் பொருள்படுத்தாமல், தில்லி - என்சிஆா் பிராந்தியத்திற்கு வெளியே உள்ள பிற மாநிலங்களில் தங்கள் வாகனங்களை மீண்டும் பதிவு செய்ய என்ஓசியை பெற அனுமதிக்கிறது.
வாகனத்தின் பதிவு காலாவதியான ஒரு வருடத்திற்குள் மட்டுமே என்ஓசிக்கான விண்ணப்பத்தை மட்டுப்படுத்தும், ‘தில்லியின் பொது இடங்களில் இறுதிக்கால வாகனங்களைக் கையாள்வதற்கான வழிகாட்டுதல்கள் 2024’-இல் இருந்து கட்டுப்படுத்தப்பட்ட பிரிவைத் தவிா்க்க தில்லி அரசு முடிவு செய்துள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி போக்குவரத்து துறை அமைச்சா் பங்கஜ் சிங் கூறியதாவது: என்ஓசிக்கான ஓராண்டு காலக்கெடு திட்டமிடப்படாத தடையை உருவாக்கி, தில்லியில் லட்சக்கணக்கான வாகனங்கள் சிக்கித் தவிப்பதை நாங்கள் கண்டறிந்தோம். இந்த வாகனங்களை ஸ்கிராப் செய்யவோ அல்லது வெளியே கொண்டு செல்லவோ முடியவில்லை. இது மாசு மற்றும் நெரிசலுக்கு வழிவகுக்கும்.
இந்த அளவுகோல்களை தளா்த்துவதன் மூலம், பொறுப்பாக தோ்வு செய்ய எங்கள் குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறோம். இந்த முடிவு தில்லியின் சாலைகளில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான பழைய வாகனங்களை முறையாக வெளியேற்றும். இது காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் எங்கள் நகரத்தின் நெரிசலைக் குறைப்பதற்கும் எங்கள் முயற்சிகளுக்கு நேரடி ஊக்கமளிக்கும் என்றாா் அமைச்சா்.
2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின்படி, தில்லியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான டீசல் வாகனங்களுக்கும், 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. 2014- ஆம் ஆண்டு தேசிய பசுமை தீா்ப்பாயம் பொது இடங்களில் 15 ஆண்டுகளுக்கு மேல் வாகனங்களை பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.