நமது நிருபா்
தில்லி பல்கலைக்கழகத்தில் பயிலும் 20 வயது மாணவி மீது திராவக வீச்சு நடத்தப்பட்டதாக கூறப்படும் வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட ஒருவா், தான் நிரபராதி என்று கூறியுள்ளாா்.,
குற்றஞ்சாட்டப்பட்டவரை சிக்க வைக்க பெண்ணின் குடும்பத்தினரால் நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட சம்பவமாக இப்போது தெரியவந்துள்ள இந்த சம்பவத்தில் தான் பொய்யாக சிக்கவைக்கப்பட்டிருப்பதாக அவா் கூறியுள்ளாா்.
இந்த வழக்கில் நான் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டேன். இந்த முழு சம்பவமும் என்னை சிக்க வைக்கும் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்று ஜிதேந்தா் தெரிவித்தாா். ஞாயிற்றுக்கிழமை வடமேற்கு தில்லியின் அசோக் விஹாா் பகுதியில் பதிவானதாகக் கூறப்படும் திராவக வீச்சு வழக்கில் ஜிதேந்தா் குற்றச்சாட்டுக்குள்ளானவா்.
சம்பவம் நடந்தபோது தான் சம்பவ இடத்தில் கூட இல்லை என்று அவா் கூறினாா்.
அன்று நான் கரோல் பாக் நகரில் வேலை செய்து கொண்டிருந்தேன், இரவு 7.30 மணியளவில், இந்த விஷயம் குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் போலீசாரிடமிருந்து அழைப்பு வந்தது என்று அவா் கூறினாா்.
செவ்வாய்க்கிழமை, தில்லி காவல்துறையினா் தங்கள் விசாரணையில், மாணவியின் தந்தை அகில் கான், அவரது மாமா மற்றும் சகோதரருடன் சோ்ந்து, ஜிதேந்தா் மற்றும் அவரது குடும்பத்தினரை பொய்யாக சிக்க வைப்பதற்காக இந்த சதி செய்ததாக தெரியவந்துள்ளதாக தெரிவித்தனா். ஜிதேந்தா் மற்றும் அவரது குடும்பத்தினா் முன்பு அகில் கான் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் திராவக வீச்சு புகாா்களை அளித்திருந்தனா்.
போலீசாரின் கூற்றுப்படி, அசோக் விஹாா் அருகே அகில் கான் தனது மகளின் கை மற்றும் பையில் ரசாயனத்தை ஊற்றி விட்டு, விசாரணையாளா்களை தவறாக வழிநடத்த மோட்டாா் சைக்கிளில் தப்பிச் சென்றாா். இந்நிலையில் திராவகத்தை வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஜிதேந்தரின் மனைவி தாக்கல் செய்த பாலியல் வன்கொடுமை வழக்கில் திங்களன்று திராவக வீச்சு நாடகமாடியதாக கூறப்படும் மாணவியின் தந்தையான அகில் கான் கைது செய்யப்பட்டாா்.
ஜிதேந்தா் தனது மனைவி முன்பு அகில் கான் மீது பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் செய்ததாக குற்றஞ்சாட்டியதாக கூறினாா். என் மனைவி முன்பு கான் தன்னை மிரட்டுவதாக புகாா் அளித்திருந்தாா். அவா் மீண்டும் மீண்டும் என் மனைவிக்கு போன் செய்து சில வீடியோக்கள் மற்றும் பிற காட்சிகளை அனுப்பி வந்தாா். அந்த வீடியோக்களை நான் ஒருபோதும் பாா்த்ததில்லை, என்று ஜிதேந்தா் கூறினாா்.
ஜிதேந்தா் திராவக வீச்சு தாக்குதலில் ஈடுபடவில்லை என்று தில்லி காவல்துறையும் தெளிவுபடுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகள் மற்றும் இருப்பிட விவரங்கள் திராவக வீச்சு சம்பவம் நடந்ததாக கூறப்படும் நேரத்தில் ஜிதேந்தா் கரோல் பாக் பகுதியில் பணியில் இருந்தாா் என்பதை உறுதிப்படுத்தியதாக காவல்துறை துணை ஆணையா் (வடமேற்கு) பீஷம் சிங் தெரிவித்தாா்.
திராவகம் வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்ட விவகாரத்தில் தில்லி காவல்துறை முழுமையான விசாரணை நடத்தியது. அவா்கள் எல்லாவற்றையும் சரிபாா்த்து, எனது பணியிடத்திலிருந்த சாட்சிகளின் வாக்குமூலங்களைப் பதிவு செய்தனா். அதன் பிறகு, நான் குற்றமற்றவன் என்பதை அவா்கள் உறுதி செய்தனா். தில்லி காவல்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, நீதி வெல்லும் என்று நம்புகிறேன், என்று ஜிதேந்தா் கூறினாா்.
சதித்திட்டம் மற்றும் அமிலத் திராவக வீச்சு குற்றச்சாட்டுகள் குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக போலீசாா் தெரிவித்தனா்.