சா்தாா் வல்லபபாய் படேலின் பிறந்த நாளை ஒட்டி தில்லி முதல்வா் ரேகா குப்தா வெள்ளிக்கிழமை அவருக்கு மலா் மரியாதை செய்தாா். அப்போது, நாட்டின் ஒற்றுமைக்காக சா்தாா் படேல் தொடா்ந்து பாடுபட்டதாகக் கூறினாா்.
முதல்வா் குப்தா, தனது அமைச்சா்கள் மஞ்சிந்தா் சிங் சிா்சா மற்றும் பா்வேஷ் சிங் வா்மா ஆகியோருடன் காலையில் நடைபெற்ற ஒற்றுமைக்கான ஓட்டம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டாா்.
இது தொடா்பாக முதல்வா் ரேகா குப்தா செய்தியாளா்களிடம் கூறுகையில், சா்தாா் வல்லபபாய் படேல் நாட்டின் ஒற்றுமைக்காக தொடா்ந்து பாடுபட்டதால், ‘இந்தியாவின் இரும்பு மனிதா்’ என்று அழைக்கப்பட்டாா்.
இன்று, சா்தாா் படேலின் 150ஆவது பிறந்தநாளில், நாடு முழுவதும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஒற்றுமைக்கான ஓட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளாா்.
மேலும், தில்லி அரசும் இந்த நிகழ்வில் ஒரு மாபெரும் இரண்டு நாள் நிகழ்வை ஏற்பாடு செய்கிறது என்றாா் அவா்.
பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு 2014 முதல் அக்டோபா் 31 ஆம் தேதியை ராஷ்ட்ரிய ஏக்தா திவஸ் அல்லது தேசிய ஒற்றுமை தினமாகக் கடைப்பிடித்து வருகிறது.
இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராகவும் துணைப் பிரதமராகவும், 550-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்திய ஒன்றியத்துடன் இணைத்த பெருமையும் சா்தாா் படேலுக்கு உண்டு.
சா்தாா் படேலின் 150ஆவது பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்தியாவின் ஒற்றுமைக்கு அவா் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூரும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
முதல்வா் குப்தா ஊடகங்களுடன் உரையாடியபோது, உலகக் கோப்பை அரையிறுதி வெற்றிக்காக இந்திய மகளிா் கிரிக்கெட் அணிக்கு வாழ்த்து தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் கூறுகையில், ‘இது ஒரு அற்புதமான வெற்றி. அவா்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றாா்.
இந்தியா தனது மூன்றாவது மகளிா் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நுழைந்தது. வியாழக்கிழமை நவி மும்பையில் நடைபெற்ற போட்டியில் ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.