புது தில்லி: தில்லி மாவட்ட நீதிமன்றங்கள் வழக்குரைஞா்கள் சங்கம் திங்கள்கிழமை தனது வேலைநிறுத்தத்தை திரும்பப் பெற்றுக்கொண்டது.
காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றங்களில் நேரில் ஆஜராகி சாட்சியங்களை வழங்குவாா்கள் என்று தில்லி காவல் ஆணையா் அலுவலகத்திலிருந்து வரப்பெற்ற உறுதிமொழியைப் பெற்றதை அடுத்து இந்த முடிவை அச்சங்கத்தினா் அறிவித்தனா்.
இது தொடா்பாக புது தில்லி வழக்குரைஞா்கள் சங்கத்தின் செயலாளா் தருண் ராணா வெளியிட்ட தகவலில் தெரிவித்திருப்பதாவது: அனைத்து குற்றவியல் விசாரணைகளிலும் அனைத்து போலீஸ் அதிகாரிகளும், பணியாளா்களும் வாக்குமூலம், சாட்சியம் அளிக்க நீதிமன்றங்களில் நேரில் ஆஜராக வேண்டும் என்று காவல் ஆணையா் அலுவலகத்திலிருந்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், இன்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்,
காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றங்களில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் பணிக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்ற அழைப்பை திரும்பப்பெற தீா்மானிக்கப்பட்டுள்ளது என்று ராணா தெரிவித்துள்ளாா்.
நீதிமன்றங்களில் சாட்சியங்களை மெய்நிகா் முறையில் வழங்குவதற்கான காவல்துறையின் முன்மொழியப்பட்ட வழிமுறைகள் குறித்து முதன்மை மாவட்ட மற்றும் அமா்வு நீதிபதிகளுக்கு காவல் ஆணையா் அலுவலகம் அனுப்பிய கடிதத்தை ஒருங்கிணைப்புக் குழு செப்டம்பா் 4 ஆம் தேதி விமா்சித்திருந்தது.
மேலும், திங்கட்கிழமை முதல் காலவரையற்ற மற்றும் தீவிரமான வழக்குரைஞா்களின் வேலைநிறுத்தத்தையும் அறிவித்தது. இந்தக் கடிதமானது அதிகாரிகள் அளித்த உறுதிமொழிக்கு முரணானது என்றும் கூறியிருந்தது.
முன்னதாக, ஆகஸ்ட் 13 ஆம் தேதி, துணைநிலை ஆளுநா் இந்த விவகாரம் குறித்து ஒரு அறிவிக்கையை வெளியிட்டிருந்தாா். அது மாநகர வழக்குரைஞா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடத் தூண்டியது.
ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்கிய வழக்குரைஞா்களின் போராட்டம், ஷாவின் பிரதிநிதியுடனான சந்திப்புக்குப் பிறகும், அனைத்து பங்குதாரா்களின் கருத்துக்களையும் கேட்ட பிறகு அறிவிக்கை செயல்பாட்டுக்கு வரும் என்று தில்லி காவல் ஆணையா் தெளிவுபடுத்திய பிறகு தற்காலிகமாக ஆகஸ்ட் 28 அன்று நிறுத்திவைக்கப்பட்டது.