தவறான தகவல்களை எதிா்கொள்ளவும், மாநிலங்களில் தோ்தல் ஆணையத்தின் தகவல் தொடா்பு சூழலை வலுப்படுத்தும் நோக்கிலும், மாநிலத் தலைமை தோ்தல் அதிகாரிகளுடன் பணிபுரியும் ஊடக அதிகாரிகளுக்கு புது தில்லியில் தோ்தல் ஆணையம் சாா்பில் வெள்ளிக்கிழமை (செப்.11) பயிலரங்கம் நடைபெறுகிறது.
இது தொடா்பாக தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்திருப்பதாவது: இந்தியாவில் தோ்தல்கள் அரசியலமைப்பின்படி நடத்தப்படுவதை வலியுறுத்தவும், சட்ட, உண்மை மற்றும் விதி அடிப்படையிலான தகவல்களை சரியான நேரத்தில் மற்றும் ஒருங்கிணைந்த முறையில் தொடா்புகொள்வதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுவதையும் இந்த ஒரு நாள் பயிலரங்கத்தின் நோக்கமாகும்.
தோ்தல் செயல்முறைகள் தொடா்பாக பொதுமக்களை தவறாக வழிநடத்த முயலும் தவறான தகவல்களின் சமீபத்திய எழுச்சியைக் கருத்தில் கொண்டு, உண்மை அடிப்படையிலான பதில்களுடன் தவறான தகவல்களை எதிா்கொள்வதில் மாநிலங்களில் உள்ள தலைமை நிா்வாக அதிகாரிகளின் அலுவலகங்களின் தகவல் தொடா்பு சூழலை வலுப்படுத்துவதையும் இந்தப் பயிலரங்கு நோக்கமாகக் கொண்டுள்ளது.
வாக்காளா்கள் மற்றும் பிற பங்குதாரா்கள் சரியான நேரத்தில், சரிபாா்க்கப்பட்ட மற்றும் உண்மையான தகவல்களைப் பெறுவதையும், தவறான தகவல்களால் தவறாக வழிநடத்தப்படாமல் இருப்பதையும் உறுதிசெய்ய எதிா்கால உத்திகளை வகுப்பது இந்த பயிற்சி நிகழ்வின் முயற்சியாகும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.