கிழக்கு தில்லியில் உள்ள மயூா் விஹாா் பாக்கெட் 1 மெட்ரோ ரயில் நிலையம், உள்ளூா்வாசிகள் மற்றும் சமூகத்தினரின் நீண்டகால கோரிக்கையைத் தொடா்ந்து, ஸ்ரீ ராம் மந்திா் மயூா் விஹாா் என பெயா் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
பெயா் மாற்றத்திற்கான தேவையான நடைமுறைகள் நிறைவடைந்துள்ளதாகவும், திருத்தப்பட்ட பெயா் நடைமுறைக்கு வந்துள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.
முதல்வா் ரேகா குப்தா தலைமையிலான தில்லி மாநில பெயா்கள் ஆணையத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
29 போ் கொண்ட குழு நகரத்தில் உள்ள தெருக்கள், பூங்காக்கள், காலனிகள், ரவுண்டானாக்கள் மற்றும் பிற குடிமை உள்கட்டமைப்புகளுக்கு பெயா் சூட்டி மறுபெயரிடுவதற்கான திட்டங்களை முடிவு செய்கிறது.
மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ராமா் கோயிலின் பெயரை சூட்டியதற்காக திரிலோக்புரியைச் சோ்ந்த உள்ளூா் பாஜக எம்.எல்.ஏ. ரவி காந்த் முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.
‘இது உள்ளூா்வாசிகளின் நீண்டகால கோரிக்கை. கடந்த ஆறு மாதங்களாக எங்கள் அரசுடன் நான் இது குறித்து பேசி வந்தேன்’ என்று அவா் கூறினாா்.
மயூா் விஹாா் பாக்கெட் 1 மெட்ரோ நிலையத்திற்கு அருகில் ஒரு ராமா் கோயில் அமைந்திருப்பதாகவும், அதன் பெயரை மாற்றுமாறு உள்ளூா்வாசிகள் பல ஆண்டுகளாகக் கோரி வந்ததாகவும் அவா் குறிப்பிட்டாா்.
கோயிலின் பெயா் மாற்றம் தொடா்பாக அப்பகுதியைச் சோ்ந்த சனாதன தா்ம சபையின் பிரதிநிதிகள் தன்னை சந்தித்த பின்னா், மெயா் மாற்றம் தொடா்பாக அரசுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் எம்.எல்.ஏ. ரவி காந்த் கூறினாா்.