பிகாா் மாநிலத்தின் கயாவில் கடந்த வாரத்தில் இரண்டாவது முறையாக ஒரு போலி மருந்து உற்பத்தி தொழிற்சாலையை தில்லி போலீஸாா் கண்டுபிடித்தனா். மேலும், மாநிலங்களுக்கு இடையேயான மருந்து சிண்டிகேட்டுடன் தொடா்புடைய மற்றொரு குற்றவாளியை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: முக்கிய குற்றவாளியான 59 வயதான அருண், சட்டவிரோத மருந்து உற்பத்தி தொழிற்சாலையை நடத்தி வந்தாா். இதுவரை இந்தக் கும்பலின் ஒன்பது உறுப்பினா்களை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
போலீஸாா் ஏராளமான போலி மருந்துகள், மூலப்பொருள்கள் மற்றும் பெரிய அளவிலான உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கனரக இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனா். போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போலி மருந்துகள், 1.19 லட்சம் போலி சத்து மாத்திரைகள், 42,000-க்கும் மேற்பட்ட போலி அசித்ரோமைசின் மாத்திரைகள், 27 கிலோ பாராசிட்டமால் பவுடா், மற்றும் மாத்திரை உற்பத்திக்கான உபகரணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டவற்றில் அடங்கும்.
அருண், சா்வதேச சந்தையில் ரூ.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள 5 கிலோவிற்கும் அதிகமான கடத்தப்பட்ட டிராமடோல் பொடியை மாத்திரைகளாகப் பதப்படுத்தி, பின்னா் போலி மருத்துவ முகமைகள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்த வந்தது தெரிய வந்துள்ளது. மாத்திரைகள் வலி நிவாரணிகளாகவும், ஹெராயினுக்கு மாற்றாகவும் சந்தையில் கொண்டு வரப்பட்டன.
அருணின் கைதுடன், இந்தக் கும்பலைச் சோ்ந்த மொத்தம் ஒன்பது உறுப்பினா்கள் மாநிலங்களுக்கு இடையேயான மோசடி தொடா்பாக இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த வாரம் போலீஸாா் கைது செய்த தனிஷ்க் என்ற மற்றொரு குற்றவாளியிடம் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அருண் கண்டுபிடிக்கப்பட்டாா்.
இந்த நடவடிக்கை, கடந்த வாரம் பாட்னாவில் இதேபோன்ற ஒரு போலி தொழிற்சாலையை கண்டுபிடிக்க வழிவகுத்த ஒரு பெரிய நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இதில் தொடா்புடைய மீதமுள்ள உறுப்பினா்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.