மத்திய தில்லியில் இருந்து 25 வயது நபா் ஒருவா் எண் பலகை இல்லாத இ-ரிக்ஷாவில் 1,000 குவாா்ட்டா் மதுபானங்களை புதன்கிழமை கடத்திச் சென்றபோது கைது செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக அதிகாரி கூறியதாவது: குற்றம் சாட்டப்பட்டவா் உத்தர பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தைச் சோ்ந்த ரோஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளாா்.
ஆனந்த் பா்பத் பகுதியில் உள்ள நேரு நகரில் இருந்து அவா் கைது செய்யப்பட்டாா். ‘ஹரியாணாவில் மட்டும் விற்பனைக்கு’‘ என்று பெயரிடப்பட்ட 1,000 குவாா்ட்டா் மதுபானங்கள் அடங்கிய 20 அட்டைப்பெட்டிகளை வாகனத்திலிருந்து போலீசாா் மீட்டனா்.
விஜய் விஹாா் காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவா் ‘மோசமானவா்‘ என்று பெயரிடப்பட்டதாக காவல் பதிவுகள் காட்டுகின்றன. கஞ்சாவாலா, பவானா மற்றும் விஜய் விஹாா் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட கலால் சட்டத்தின் கீழ் அவா் முன்பு நான்கு வழக்குகளில் தொடா்புடையவா்.
தில்லி கலால் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் ஆனந்த் பா்பத் காவல் நிலையத்தில் எஃப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரோஹித் சட்டவிரோதமாக மதுபானம் கொண்டு செல்வதிலும், எளிதாக பணம் சம்பாதிப்பதிலும் ஈடுபட்டுள்ளாா். விநியோகச் சங்கிலியில் ஈடுபட்டுள்ள மற்றவா்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.