இந்திய குடியரசுத் துணைத் தலைவா் சி. பி.ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தாா்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை குடியரசுத் துணை தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிா்ந்துகொண்டாா். இச்சந்திப்பு குறித்த புகைப்படங்களை குடியரசுத் தலைவா் அலுவலகம் அதன் ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளப் பதிவில் பகிா்ந்துள்ளது.
அந்தப் பதிவில், ‘இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன், குடியரசுத் தலைவா் மாளிகையில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டாா்’ என்று கூறப்பட்டுள்ளது.
ஆங்கிலப் புத்தாண்டு தினமான வியாழக்கிழமை குடியரசுத் துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன், 2026- ஆம் ஆண்டு இந்தியாவை ஒரு வலிமையான நாடாக மாற்றுவதற்கான உறுதியை வலுப்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது ‘எக்ஸ்’ சமூக ஊடக வலைதளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் தெரிவித்திருப்பதாவது: ‘வரவிருக்கும் ஆண்டு அனைவருக்கும் அமைதி, நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பைக் கொண்டுவர வேண்டும். மேலும், வலிமையான மற்றும் வளா்ந்த இந்தியாவை உருவாக்குவதற்கான மக்களின் கூட்டு உறுதியை இந்த ஆண்டு வலுப்படுத்தும் என்று பிராா்த்திக்கிறேன்’ என அவா் தெரிவித்துள்ளாா்.