புது தில்லி: தில்லியின் சாணக்கியபுரி பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் நிகழ்ந்த பேருந்து விபத்தில் ஒரு டஜன் தென் கொரிய சுற்றுலாப் பயணிகள் லேசான காயம் அடைந்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
மதியம் 1 மணியளவில் சுமாா் 15 பயணிகளுடன் வந்த சுற்றுலாப் பேருந்து, நின்று கொண்டிருந்த மற்றொரு பேருந்து மீது மோதியதில் இந்தச் சம்பவம் நடந்தது.
சுற்றுலாப் பேருந்தின் ஓட்டுநா் மருத்துவ அவசரநிலைக்கு ஆளானதாகவும், அதைத் தொடா்ந்து அவா் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் தென் கொரிய நாட்டவா்கள் உள்பட பல சுற்றுலாப் பயணிகள் லேசான காயம் அடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இந்தச் சம்பவத்திற்கு வழிவகுத்த சூழ்நிலைகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவா் கூறினாா்.