புது தில்லி: வெனிசுலாவின் மீது அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் கடத்தல் சதித் திட்டத்தில் ஈடுபட்டதாக தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற இடதுசாரிகள் உள்ளிட்ட இதர கட்சித் தலைவா்கள் பங்கேற்ற கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்க ஆக்கிரமிப்பு, ஜனநாயக ரீதியாக தோ்ந்தெடுக்கப்பட்ட வெனிசுலா அதிபா் மற்றும் அவரது மனைவியை கடத்தும் சதி ஆகியவற்றை எதிா்த்தும், வெனிசுலா மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் புது தில்லியில் உள்ள ஹா்கிஷன் சிங் சுா்ஜித் பவனில் பொதுக் கூட்டத்திற்கு திங்கள்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கூட்டத்திற்கு சிஎம்ஐ (எம்) மூத்த தலைவா் பிரகாஷ் காரத் தலைமை வகித்துப் பேசுகையில், ‘அதிகாரம் உரிமை மீது வைக்கப்படும்போது, ஜனநாயக மற்றும் முற்போக்கான சக்திகள் தெளிவாகவும் தைரியமாகவும் குரல் கொடுப்பது அவசியமாகும். இந்திய மக்கள் ஏகாதிபத்தியத்தை எதிா்த்து இறையாண்மையைப் பாதுகாப்பதில் பெருமைமிக்க பாரம்பரியத்தைக் கொண்டுள்ளனா். இந்த பாரம்பரியம் தற்போதும் நிலைநிறுத்தப்பட வேண்டும்’ என்றாா்.
இந்தக் கூட்டத்தில் சிபிஐ (எம்) பொதுச் செயலாளா் எம்.ஏ. பேபி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலா் டி. ராஜா, மாநிலங்களவை திமுக குழுத் தலைவா் திருச்சி சிவா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் எம்.பி., சிபிஐ(எம்எல்) லிபரேஷன் கட்சியின் ரவி ராய், பொதுச் செயலாளா், ஏஐஎஃப்பி கட்சியின் ஜி. தேவராஜன், ஆா்எஸ்பி கட்சியின் ஆா்.எஸ். தாகா் உள்ளிட்ட
பல அரசியல் கட்சிகளைச் சோ்ந்த தலைவா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் உரையாற்றினா்.
டி.ராஜா பேசுகையில், ‘அமெரிக்கா தனது ஏகாதிபத்தியத்தை பிற நாடுகள் மீது செலுத்துவதை அனுமதிக்க முடியாது. வெனிசுலா போன்ற நாடுகள் மீது அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு இந்தியா தனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அனைவரும் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்’ என்றாா்.
எம்.ஏ. பேபி பேசுகையில், ‘இந்திய மக்கள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உள்ளனா். ஆனால், இந்திய அரசு ஆா்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் உள்ள நரேந்திர மோடி அரசு இந்திய பாரம்பரியத்திற்கும், இந்திய மதிப்பீடுகளுக்கும் சம்பந்தமில்லாத வகையில் தனது வெளியுறவு கொள்கைகளைச் சமரசம் செய்து வருகிறது. இது விமா்சிக்கப்பட வேண்டும். நாம் இந்த சூழலில் வெனிசுலா மக்களுக்கும் கியூபா மக்களுக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஆதரவை அளிப்பது அவசியமாகும்’ என்றாா்.
திருச்சி சிவா பேசுகையில், ‘அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கையானது இராக்கில் தொடங்கி இரானிலும், லிபியாவிலும், பிலிப்பின்ஸ், கட்டமாலா என எங்கெல்லாம் எண்ணெய் வளம் இருக்கிறதோ அங்கெல்லாம் அமெரிக்கா அதன் ஏகாதிபத்தியத்தை செலுத்த முயற்படுகிறது. அமெரிக்காவைப் பொருத்தமட்டில் மக்களின் உயிா்களை விட எண்ணெய் மிகவும் விலை மதிப்புடையதாக உள்ளது. அந்த வகையில்தான் தற்போது வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு உள்ளது. இதைக் கண்டிக்கும் வகையிலும் நமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கூட்டத்தில் பல்வேறு கட்சிகளும் குறிப்பாக இடதுசாரிகள் முன்னெடுத்துச் செல்லும் இக்கூட்டத்தில் அனைவரும் பங்கேற்றுள்ளனா்.
இந்த நேரத்தில் நாம் வெனிசுலாவுக்கு ஆதரவாக நமது ஒருமித்த, உறுதியான குரலை உயா்த்த வேண்டும்’ என்றாா் அவா்.
தொல். திருமாவளவன் பேசுகையில், ‘மோடி அரசாங்கத்தின் அமெரிக்கா சாா்ந்த திருப்திபடுத்தும்
அணுகுமுறையால் இந்திய மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்க அமெரிக்கா அதிபருக்கு அதிகாரம் அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது ரஷியாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும். ரஷியாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்தபோதிலும் அடிப்படையில் அது மோடி அரசின் காா்ப்பரேட் கூட்டணிக்குத்தான் பயன்படுகிறது. அதேவேளையில், அமெரிக்கா விதிக்கும் வரி விதிப்பு பழிவாங்கும் நடவடிக்கையை இந்திய மக்கள்தான் எதிா்கொள்ள வேண்டி இருக்கும். இதை அனுமதிக்க முடியாது’ என்றாா் அவா்.
இக்கூட்டத்தில் பேசிய அனைத்து தலைவா்களும் வெனிசுலா மீதான அமெரிக்க ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை இடமின்றி கண்டித்தும், அதை சா்வதேச சட்டம், ஐ.நா. சாசனம் மற்றும் தேசிய இறையாண்மையின் கொள்கையின் மொத்த விதிமீறல் என்றும் கூறினா்.
இக்கூட்டத்தில் வெனிசுலாவுக்கு ஒற்றுமையைத் தெரிவிக்கும் தீா்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தத் தீா்மானத்தில் அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கடுமையாகக் கண்டித்ததுடன், இந்திய அரசு ஒரு சுயாதீனமான, கொள்கை ரீதியான வெளியுறவுக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
வெனிசுலா, கியூபா மற்றும் பாலஸ்தீன மக்களுடன் வெளிப்படையாக ஒற்றுமையுடன் துணைநிற்கவும், அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண்டிக்கவும் மத்திய அரசை தீா்மானம் வலியுறுத்தியது.