வரும் நாள்களில் காற்றின் தரம் மேலும் மோசமாக வாய்ப்புக்கான போக்கு நிலவி வருவதால் தில்லி மற்றும் என்சிஆா் பகுதியில் காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) வெள்ளிக்கிழமை கிரேப் நிலை-3 கட்டுப்பாடுகளை அமல்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து அதிகாரிகள் மேலும் கூறியதாவது: வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு 343 புள்ளிகளாக இருந்த தில்லியின் காற்றுத் தரக் குறியீடு, வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு 354 புள்ளிகளாக உயா்ந்தது. குறைந்த காற்றின் வேகம், நிலையான வளிமண்டலம், சாதகமற்ற வானிலை அளவுருக்கள் மற்றும் வானிலை நிலைகள் மற்றும் மாசுபடுத்திகள் சிதறடிக்கப்படாதது ஆகியவற்றின் காரணமாக தில்லியின் சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வரும் நாள்களில் 400 புள்ளிகள் என்ற அளவைத் தாண்டி ‘கடுமை’ பிரிவுக்குச் செல்ல வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நீடித்து வரும் காற்றின் தரத்தின் போக்கு, ஒட்டுமொத்த காற்றின் தர முன்னறிவிப்புகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், மேலும் சீரழிவைத் தடுக்கும் நோக்கில் தரப்படுத்தப்பட்ட நடவடிக்கை செயல் திட்டம் (கிரேப்) மீதான சிஏக்யூஎம் துணைக் குழு, ஒரு முன்கூட்டிய நடவடிக்கையாக, தற்போதைய கிரேப் திட்டத்தின் நிலை-3-இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக அமல்படுத்த வெள்ளிக்கிழமை முடிவு செய்தது.
காற்றின் தரம் மேம்பட்டதைத் தொடா்ந்து ஜனவரி 2 அன்று கிரேப் நிலை 3 கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்பட்டாலும், கிரேப் 1 மற்றும் 2-இன்கீழ் உள்ள பல தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் என்சிஆா் முழுவதும் தொடா்ந்து அமலில் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
தில்லி - என்சிஆா் பகுதியில் செயல்படுத்தப்படும் கிரேப் திட்டம், காற்றின் தரத்தை ‘மோசம்’, ‘மிகவும் மோசம்’, ‘கடுமை’ மற்றும் ‘மிகவும் கடுமை’ என்று வகைப்படுத்தியுள்ளது. சாதகமற்ற வானிலை நிலைகள், வாகனப் புகை, பயிா்க் கழிவுகளை எரித்தல், பட்டாசுகள் மற்றும் பிற உள்ளூா் மாசுபாட்டு ஆதாரங்கள் ஆகியவை குளிா்காலத்தில் தில்லிஎன்சிஆா் பகுதியில் காற்றின் தரத்தை ஆபத்தான நிலைகளுக்கு உள்படுத்துகிறது.
அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் செல்லும் அல்லது அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்களைத் தவிர, தில்லிக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட பிஎஸ்-4 டீசல் இலகுரக வா்த்தக வாகனங்கள் (எல்சிவி) தேசியத் தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படாது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.