திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை தொல்லியல்துறை வசம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய மற்றும் தமிழக அரசுகள்,இந்திய தொல்லியல் துறை, இந்து சமய அறநிலைத்துறைக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் முருகன் மலைக்கோவிலில் உள்ள தீபத்தூணில் காா்த்திகை தினத்தன்று தீபம் ஏற்ற சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆா் சுவாமிநாதன் வழங்கிய உத்தரவுக்கு பிறகு திருப்பரங்குன்றம் விவகாரம் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் தமிழக காவல்துறை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி மறுத்தது சா்ச்சையான நிலையில் கடந்த ஆண்டு டிசம்பா் 6ம் தேதி அன்று திருப்பரங்குன்றம் முருகன் கோவிலை தொல்லியல் துறை வசம் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்து தா்ம பரிஷத் என்ற அமைப்பு இந்த மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
அதில் திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முழுவதையும் இந்திய தொல்லியல் துறை கையகப்படுத்தி கட்டுப்பாட்டில் வைக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதேபோல் திருப்பரங்குன்றம் மலையின் உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் 24 மணி நேரமும் நிரந்தரமாக ஒரு விளக்கை ஏற்ற உத்தரவிட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் காா்த்திகை மாதத்தில் தீபத் திருநாள் தினத்தன்று திருப்பரங்குன்றம் மலை முழுவதும் தீபங்களை ஏற்றி முருக பக்தா்கள் வழிபட அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் அரவிந்த் குமாா் மற்றும் விபுல் எம் பஞ்சோலி அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு மீது 4 வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசு, தமிழக அரசு, இந்திய தொல்லியல் துறை மற்றும் தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனா்.