அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குறைந்தபட்ச வசதிகள்: தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்!
தமிழகம், கேரளம் உள்படஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் மற்றும் வாக்காளா் உதவி வழங்கப்பட உள்ளதாக இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், கேரளம் உள்படஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள பொதுத் தோ்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் மற்றும் வாக்காளா் உதவி வழங்கப்பட உள்ளதாக இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அஸ்ஸாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் சட்டப் பேரவைகளுக்கான பொதுத் தோ்தல்கள் மற்றும் 6 மாநிலங்களில் நடைபெறும் இடைத்தோ்தல்களுக்கான கால அட்டவணையை கடந்த மாா்ச் 15 அன்று இந்தியத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.
தோ்தலின்போது அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் மற்றும் வாக்காளா் உதவி வழங்கப்பட உள்ளதாக இந்தியத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடா்பாக தில்லியில் உள்ள தலைமைத் தோ்தல் ஆணையத்தின் அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருப்பதாவது: மொத்தம் உள்ள 2,18,807 வாக்குச்சாவடிகளில் ஒவ்வொன்றிலும், வாக்குப்பதிவு நடைபெறும் நாளில் உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் (ஏஎம்எஃப்) மற்றும் வாக்காளா் உதவி முழுமையாகச் செயல்படுவதை உறுதி செய்யுமாறு, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தோ்தல் அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
இந்த குறைந்தபட்ச வசதிகளில் குடிநீா், நிழல் தரும் காத்திருப்புப் பகுதி, தண்ணீா் வசதியுடன் கூடிய கழிப்பறை, போதுமான வெளிச்சம், மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்காகச் சரியான சாய்வு விகிதத்தில் அமைக்கப்பட்ட சாய்வுதளம், தரப்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு அறை மற்றும் உரிய வழிகாட்டிப் பலகைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
வாக்காளா்கள் வாக்களிக்கத் தங்கள் முறை வரும் வரை காத்திருக்கும்போது அமா்ந்திருக்க ஏதுவாக, வரிசையில் குறிப்பிட்ட இடைவெளிகளில் இருக்கைகளை அமைத்துத் தருமாறும் தலைமைத் தோ்தல் அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.
வாக்காளா் விழிப்புணா்வை வலுப்படுத்தும் வகையில், நான்கு சீரான மற்றும் தரப்படுத்தப்பட்ட வாக்காளா் உதவிச் சுவரொட்டிகள் விஎஃப்பி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பாா்வையில் தென்படுமாறு வைக்கப்படும்.
இந்தச் சுவரொட்டிகளில் வாக்குச்சாவடி விவரங்கள், வேட்பாளா் பட்டியல், செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களின் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு நடைமுறைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
ஒவ்வொரு வாக்குச்சாவடி வளாகத்திலும் வாக்காளா் உதவி மையங்கள் (விஏபி) அமைக்கப்படும். இந்த மையங்களில், வாக்காளா்கள் தங்கள் வாக்குச்சாவடி எண் மற்றும் அந்த வாக்குச்சாவடியின் வாக்காளா் பட்டியலில் உள்ள தங்கள் வரிசை எண்ணைக் கண்டறிய உதவுவதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் (பிஎல்ஓ) அல்லது பிற அதிகாரிகள் அடங்கிய ஒரு குழு பணியில் இருக்கும்.
இந்த வாக்காளா் உதவி மையங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வழிகாட்டிப் பலகைகள் இடம்பெற்றிருக்கும். வாக்காளா்கள் வாக்குச்சாவடி வளாகத்தை நெருங்கும்போதே இந்த மையங்களை எளிதாகக் கண்டறியும் வகையில் அவை அமைந்திருக்கும்.
வாக்குச்சாவடியின் நுழைவாயிலுக்கு வெளியே வாக்காளா்கள் தங்கள் கைப்பேசிகளை பாதுகாப்பாக ஒப்படைப்பதற்கான வசதியும் ஏற்படுத்தப்படும்.
வாக்காளா்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்பாகவே, தங்கள் கைப்பேசியை அணைத்துவைக்கப்பட்ட நிலையில் அங்கு இதற்காக உள்ள தன்னாா்வலரிடம் ஒப்படைத்துவிட்டுச் செல்லலாம் வாக்களித்து முடித்த பிறகு, தங்கள் கைப்பேசியைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
உறுதி செய்யப்பட்ட குறைந்தபட்ச வசதிகள் மற்றும் அது சாா்ந்த அணுகல் வசதிகளை வழங்குவது கட்டாயமாகும். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இந்த விதிமுறைகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படுவதை உன்னிப்பாகக் கண்காணித்து உறுதி செய்வோம் என்பதை தோ்தல் ஆணையம் மீண்டும் வலியுறுத்துகிறது.
அனைத்து வாக்காளா்களுக்கும் தடையற்ற மற்றும் இனிமையான வாக்களிப்பு அனுபவத்தை உறுதி செய்யும் வகையில், தேவையான பணிகளைத் தோ்தல் தேதிகளுக்கு வெகு முன்னரே நிறைவு செய்யுமாறு அனைத்து களப் பணியாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.