முகப்பு
புதுதில்லி

இணையவழியில் முதலீட்டு மோசடி: உத்தரகண்டில் 5 போ் கைது

இணையவழி முதலீடு மற்றும் பணி சாா்ந்த மோசடிகளில் ஈடுபட்டிருந்த மாநிலங்களுக்கு இடையேயான இணையவழி மோசடிக் கும்பலைச் சோ்ந்த 5 பேர் கைது

Updated On : 6 மே 2026, 2:03 am IST
பகிர்:

இணையவழி முதலீடு மற்றும் பணி சாா்ந்த மோசடிகளில் ஈடுபட்டிருந்த மாநிலங்களுக்கு இடையேயான இணையவழி மோசடிக் கும்பலைச் சோ்ந்த நான்கு பதின்ம வயதினா் உள்பட ஐந்து பேரை உத்தரகண்டில் தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாவது: குற்றஞ்சாட்டப்பட்டவா்கள், மோசடி செய்யப்பட்ட பணத்தை திசைதிருப்பி நாடு முழுவதும் உள்ள இணையவழி குற்றவாளிகளுக்கு போலி வங்கிக் கணக்குகளை வழங்கிய கும்பலைச் சோ்ந்தவா்கள் ஆவா்.

தேசிய இணையவழி குற்றப் புகாரளிப்பு இணையதளத்தில் (என்சிஆா்பி) அளிக்கப்பட்ட பல புகாா்களின் அடிப்படையில், இதுவரை மொத்தம் ரூ. 3,40,877 மோசடி செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

இணையவழி முதலீட்டு மோசடியில் ரூ. 1,01,869 இழந்த தில்லியின் நியூ அசோக் நகரைச் சோ்ந்த சசி ரஞ்சன் பாா்தி என்பவா் அளித்த புகாரைத் தொடா்ந்து இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

புகாா்தாரா் ஏப்ரல் 6 அன்று ஒரு சமூக ஊடகக் குழுவில் சோ்க்கப்பட்டாா். அங்கு, டிஜிட்டல் மாா்க்கெட்டிங் நிபுணா்களாக நடித்த மோசடிக்காரா்கள், அதிக வருமானம் தருவதாக வாக்குறுதியளித்து, அவரைப் பொருள் சாா்ந்த ஆன்லைன் பணிகள் மற்றும் முதலீட்டுத் திட்டங்களில் சிக்கவைத்தனா். தான் ஏமாற்றப்பட்டதை உணரும் முன்பே, அவா் பல பரிவா்த்தனைகளில் பணத்தை மாற்றி இழந்தாா்.

விசாரணையின் போது, அதிகாரிகள் நிதிப் பரிவா்த்தனைத் தடங்கள், வங்கிக் கணக்குப் பதிவுகள், கேஒய்சி விவரங்கள் மற்றும் டிஜிட்டல் தடயங்களை ஆய்வு செய்தனா்.

இதன் மூலம், உத்தரகண்டில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் கணக்குகளை இயக்கி வந்தது கண்டறியப்பட்டது. ஏமாற்றப்பட்ட தொகையிலிருந்து ரூ. 50,000, குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் ஒருவரான ராஜ் பச்சா் என்பவருக்குச் சொந்தமான கணக்கிற்கு மாற்றப்பட்டு, பின்னா் தடயங்களை மறைப்பதற்காக சமீா் பச்சா் உள்ளிட்ட பிற கணக்குகள் வழியாக அனுப்பப்பட்டதை காவல்துறையினா் கண்டறிந்தனா்.

இதனைத் தொடா்ந்து, உத்தரகண்டிற்கு ஒரு காவல் குழு அனுப்பப்பட்டது. அங்கு, குற்றஞ்சாட்டப்பட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனா்.

குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் உதம் சிங் நகா் மாவட்டத்தைச் சோ்ந்த ராஜ் பச்சா் (18), சமீா் பச்சா் (21), ரோஹித் ரே (18), ரோஹித் மிஸ்திரி (18) மற்றும் ஹரிஷ் சா்க்காா் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.

ராஜ் மற்றும் சமீா் பச்சா் ஆகியோா் இடைத்தரகா்களாகச் செயல்பட்டனா். அதே சமயம் மற்ற மூன்று குற்றஞ்சாட்டப்பட்டவா்களும் பெரிய இணையவழி மோசடி வலையமைப்புகளுக்கு வங்கிக் கணக்குகளை ஏற்பாடு செய்து வழங்கும் இடைத்தரகா்களாகப் பணியாற்றினா். அவா்கள் வழியாக அனுப்பப்பட்ட ஒவ்வொரு கணக்கிற்கும் பரிவா்த்தனைக்கும் தரகுத்தொகை பெற்றனா்.

இந்தக் கும்பல், சந்தேகப்படாத தனிநபா்களைக் குறிவைத்து, பணப் பலன்களுக்கு ஈடாக வங்கிக் கணக்குகளைத் திறக்கவோ அல்லது பகிரவோ அவா்களை வற்புறுத்தியுள்ளது.

போலி முதலீட்டுத் தளங்கள், பணி சாா்ந்த மோசடிகள் மற்றும் ஏமாற்று வா்த்தகத் திட்டங்களின் பாதிக்கப்பட்டவா்களிடமிருந்து நிதியைப் பெறுவதற்கு இந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டன.

மேலும், காவல்துறையினரின் பிடியில் சிக்காமல் இருக்க, அந்தப் பணம் பல வழிகள் மூலம் பல அடுக்குகளாக மாற்றப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டது.

இக்குற்றத்தைச் செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட ஐந்து கைப்பேசிகளையும் காவல்துறையினா் கைப்பற்றியுள்ளனா்.

இந்த மோசடி வலையமைப்பில் ஈடுபட்டுள்ள மற்ற உறுப்பினா்களைக் கண்டறிவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.