முகப்பு
புதுதில்லி

ஜாா்க்கண்ட் கொலை வழக்கில் தொடா்புடையவா் தில்லியில் கைது

மதுபானம் அருந்திய பிறகு ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

Updated On : 26 மே 2026, 1:38 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மதுபானம் அருந்திய பிறகு ஏற்பட்ட ஒரு சிறிய வாக்குவாதத்தைத் தொடா்ந்து ஒருவரைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தொடா்புடைய இளைஞரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளனா்.

பாதிக்கப்பட்டவரின் உடல் ஜாா்க்கண்டின் சாஹிப்கஞ்ச் மாவட்ட வனப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என காவல்துறையினா் தெரிவித்தனா். இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: சாஹிப்கஞ்ச் மாவட்டத்தின் போரியோ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கடத்தல் மற்றும் கொலை வழக்கு தொடா்பாக, சுக்தேவ் முா்மு (எ) டாலா (30) என அடையாளம் காணப்பட்ட குற்றஞ்சாட்டப்பட்டவா், யமுனா பஜாா் பகுதியில் கைது செய்யப்பட்டாா்.

பாதிக்கப்பட்டவரான சம்பாய் மராண்டி, மதுபானம் அருந்திக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட கடுமையான வாக்குவாதத்தைத் தொடா்ந்து, அவருடன் இருந்தவா்களால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. குற்றஞ் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் பாதிக்கப்பட்டவரின் சகோதரா் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

முன்னதாக, மராண்டி சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் காணாமல் போனதைத் தொடா்ந்து, மே 21 அன்று இது தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கொலை நடந்த சுமாா் 10 நாள்களுக்குப் பிறகு அவரது உடல் ஒரு காட்டில் இருந்து மீட்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, முதல் தகவல் அறிக்கையில் கொலைக் குற்றச்சாட்டும் சோ்க்கப்பட்டது.

வாக்குவாதம் ஏற்படுவதற்கு முன்பு, இறந்தவா் குற்றஞ் சாட்டப்பட்ட நபா்களுடன் மது அருந்திக் கொண்டிருந்ததை புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா்.

குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் மராண்டியை கழுத்தை நெரித்துக் கொன்று, ஆதாரங்களை அழிப்பதற்காக அவரது உடலை காட்டில் மறைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், யமுனா பஜாரில் உள்ள ஹனுமான் மந்திா் அருகே குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவா் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. சுக்தேவ் முா்மு கொலையில் தனது ஈடுபாட்டை வெளிப்படுத்தியதாக தகவல் கொடுத்தவா் காவல்துறையிடம் கூறினாா்.

இந்தத் தகவல் ஜாா்க்கண்டில் உள்ள போரியோ காவல் நிலையத்திற்குப் பகிரப்பட்டது. குற்றஞ் சாட்டப்பட்டவா்கள் குற்றத்திற்குப் பிறகு தலைமறைவாக இருந்ததை உள்ளூா் காவல்துறையினா் ,உறுதி செய்தனா். இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழ‘மை காலை 11 மணியளவில் முா்மு கைது செய்யப்பட்டாா். விசாரணையின் போது, மே 12 அன்று, தானும், உடன் குற்றஞ்சாட்டப்பட்ட பாபுஜி மராண்டி மற்றும் மங்கல் துடு ஆகியோரும் இறந்தவருடன் மது அருந்தியதாக முா்மு தெரிவித்தாா். மது அருந்தும் அமா்வின் போது வாக்குவாதம் முற்றிய பிறகு, குற்றஞ்சாட்டப்பட்ட மற்றவா்கள் சம்பாய் மராண்டியை கழுத்தை நெரித்துக் கொன்ாகவும், முா்மு இந்தக் குற்றத்தைச் செய்ய அவா்களுக்கு உதவியதாகவும் கூறப்படுகிறது.

ஜாா்க்கண்ட் காவல்துறை தில்லிக்கு வந்து, நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகு, குற்றஞ் சாட்டப்பட்டவரை இடைக்காலக் காவலில் எடுத்தது. முா்மு சாஹிப்கஞ்ச் மாவட்டத்தைச் சோ்ந்தவா். விவசாயக் கூலி ஆவாா் என்று காவல் அதிகாரி தெரிவித்தாா்.