காந்தியை அறிதல் - தரம்பால்; பக்.176; ரூ.120.
"என்னுடைய வாழ்க்கைதான் என்னுடைய செய்தி' என்றவர் மகாத்மா காந்தி. அப்படியானால் மகாத்மா காந்தியின் வாழ்க்கை என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. "சத்தியசோதனை' என்ற அவருடைய சுயசரிதை அதை ஓரளவுக்கே கூறியது. ஏனென்றால் காந்தியின் வாழ்க்கை என்பது அவருடைய சொந்தக் கதையால் ஆனது அல்ல. அது ஒட்டுமொத்த இந்தியாவின் சரித்திரமாக இருந்தது. வாழ்நாள் முழுதும் அவர் படித்துக் கொண்டும் எழுதிக்கொண்டும் பிரயாணம் செய்தபடியும் பிரசாரம் செய்தபடியும் விவாதித்துக் கொண்டும் இருந்தார். அவ்வளவையும் புத்தகமாகத் தொகுப்பது சாத்தியமல்ல. மகாத்மாவுடன் சுமார் ஆறேழு ஆண்டுகள் நெருங்கிப் பழகியிருந்தாலும் காந்தியின் சிந்தனையை விளங்கிக் கொள்வதில் இருக்கும் சிக்கலைப் பல இடங்களில் விளக்குகிறார் தரம்பால். காந்தியின் பேச்சுகளையும் எழுத்துகளையும் தொகுத்து சுமார் 50 ஆயிரம் பக்கங்களில் நூறு தொகுதிகளாக வெளியிட்டிருந்தாலும் அது முழுமையானதல்ல என்றும் கூறியிருக்கிறார். காந்தியின் வாழ்க்கை தியாகங்களால் நிரம்பி வழியும் பாற்கடல். அதைப் பருகி முடிக்க பூனைகளால் இயலுவதில்லை; அதற்குக் காயசண்டிகையின் பசி அவசியம்.
ஆதிரை - க.வை.பழனிசாமி; பக்.184; ரூ.140.
காதலையும் காட்டையும் இணைக்க முடியுமா? "ஆதிரை' நாவல் அதைச் செய்திருக்கிறது. மனிதர்களைப் புரிந்து கொள்வது எத்தனை சுவாரஸ்யமும் கடினமும் நிறைந்ததோ அது காட்டுக்கும் பொருந்தும். ஆதியுடனான காதல் வாழ்வுக்குப் பிறகு கவினோடு காட்டுப் பயணத்துக்குச் செல்லும் ஆதிரைக்கு ஏற்படும் அனுபவங்கள் சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. கம்ப்யூட்டரில் விளையாடும் விளையாட்டிலும்கூட பறவையையும் விலங்கையும் பிரதானப்படுத்தியிருப்பது நாவலின் இயற்கைச் சூழல் ஆர்வத்தை உயர்த்தியிருக்கிறது. புதிய வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தும் மீபுனைவு உத்திகள், கனா, ழ, கதிர், வனா போன்ற கதை மாந்தர்களின் பெயர்கள் என எழுத்துக்கான சிரத்தை போற்றத்தக்கது.
மேற்கண்ட இரண்டு நூல்களையும் வெளியிட்டோர்: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில்; )04652- 278525.
ஸ்ரீ சுகர் ஜீவநாடி அற்புதங்கள் - அ.நடராஜன்; பக்.232; ரூ.130; கற்பகம் புத்தகாலயம், சென்னை. )044-24314347.
மகாபாரதத்தில் பரீட்சித்து ராஜாவுக்கு ஸ்ரீமத் பாகவதத்தை உபதேசிப்பவர் ஸ்ரீசுகப் பிரம்மம். ரிஷியான இவர் தமிழகத்தில் வழங்கும் சித்த புருஷர்களைப் போல் பலருக்கு ஜீவநாடியில் வெளிப்படுகிறார் என்பர். இந்தச் சுக முனியின் கதைகள், அவருடைய தோற்றம், புலமை, ஜீவநாடியில் வெளிப்பட்ட இவரின் புராணம் ஆகியவற்றை நூலின் முன்பகுதியில் காணலாம். இந்தியா எங்கும் சுகர் கோயில் கொண்ட தலங்கள், சுகர் பற்றிய இலக்கியக் குறிப்புகள், தல புராணங்கள் எனப் பல்வேறு இதழ்களில் வெளிவந்த குறிப்புகளையும் விடாமல் தொகுத்துள்ளார். எனவே இந்த நூல் ஸ்ரீ சுகரைப் பற்றிய முழுமையான தொகுப்பாகத் திகழ்கிறது. தகுந்த விளக்கப்படங்கள் சுவாரஸ்யத்தைத் தூண்டுகிறது.
உலக வர்த்தக அமைப்பு - ஓர் அறிமுகம் - டி.நரசிம்ம ரெட்டி, கே.என்.ஹரிலால், ஜெ.ஜெயரஞ்சன்; தமிழில்: ஜெ.ஜெயரஞ்சன்; பக்.84; ரூ.65.
உலகமயச் சூழலில் உலகின் வர்த்தகத்தை நெறிப்படுத்த ஏற்பட்ட அமைப்பான உலக வர்த்தக அமைப்பின் தோற்றம், வளர்ச்சி போன்றவற்றைப் பற்றிய விரிவான தகவல்களைத் தரும் நூல். வளரும் நாடுகளாகவும், வளர்ந்த நாடுகளாகவும் உலகம் பிரிந்து கிடக்கும்போது உலகம் முழுமைக்குமான வர்த்தக நெறிமுறைகளை உருவாக்குவது கடினம். ஏனெனில் ஒவ்வொரு நாட்டினுடைய அரசியல்,பொருளாதாரம் போன்றவை வேறுபட்ட வளர்ச்சிநிலைகளைக் கொண்டிருக்கும். வேறுபட்ட வளர்ச்சிநிலைகளை உடைய நாடுகளினிடையே ஒரே மாதிரியான வர்த்தகக் கொள்கைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவது சிரமம். இதனால் உலக வர்த்தக அமைப்பு, பல நாடுகள் பங்குபெறும் பல கூட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது. அந்த அடிப்படையில் இதுவரை நடந்த பல கூட்டங்களைப் பற்றியும், பேச்சு வார்த்தைகளைப் பற்றியும், வந்தடைந்த முடிவுகளைப் பற்றியும் இந்நூலில் பல தகவல்கள் அடங்கியிருக்கின்றன. உலக வர்த்தக அமைப்பையும், அதன் நடைமுறைகளையும் பற்றித் தெரிந்து கொள்ள உதவும் சிறந்த நூல்.
மனிதன் எப்படி பேராற்றல் மிக்கவன் ஆனான்? - எம். இலியீன், யா. ùஸகால்; தமிழில்: நா. முகம்மது செரீபு; பக்.288; ரூ.350.
முன்பு மாஸ்கோ வெளியீடாக வந்து அனேக வாசகர்களின் அபிமானத்தைப் பெற்ற புத்தகம். "மனிதன் என்பதே மகத்தான சொல்' என்றார் சோவியத் ரஷ்யாவின் மாபெரும் எழுத்தாளர் மக்சீம் கார்க்கி. இந்த நூலின் நோக்கத்தை முன்மொழிந்ததும் அவர்தான். இந்த நூலின் புதிய பதிப்பைக் காணும்போது அவரது நோக்கம் செம்மையாகவே நிறைவேற்றப்பட்டிருப்பதை மீண்டும் உணர்கிறோம். மனிதன் எப்படித் தோன்றினான்? எப்படி வேலை செய்யவும் சிந்திக்கவும் தொடங்கினான்? எப்படி நெருப்பையும் இரும்பையும் பற்றி அறிந்துகொண்டான்? எப்படித் தன் திறமையை வளர்த்துக்கொண்டான்?...என்பதன் வரலாற்றைச் சுவாரஸ்யமாகவும் அற்புதமான நிறையச் சித்திரங்கள் வழியாகவும் விரிவாகச் சொல்லும் இந்த அரிய நூல், பனிரெண்டு அத்தியாயங்களின் கீழ் எண்பத்தொன்பது தலைப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூகத்தின் அனைத்துப் பிரிவு வாசகர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் இது.
மேற்கண்ட இரண்டு நூல்களையும் வெளியிட்டோர்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை. )044-26359906.
அச்சுவெல்ல மண் - ம.தவசி; பக்.144; ரூ.81; புதுப்புனல் பதிப்பகம், சென்னை. )9884427997
12 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. மனித மனத்தின் சிக்கல்கள்,தொல்குடியின் துயரம், புலம்பெயர்ந்தோரின் வலி என யதார்த்தமும், தொன்மமும் இவரது கதைகளில் பின்னிப் பிணைந்துள்ளன. முகமூடிகளை மாட்டிக்கொண்டு மனிதர்கள் திரியும் சூழலில் சரியான எழுத்து ஒன்றே எல்லாவற்றையும் கண்டறிந்து கடந்து போகிறது என்கிறார் நூலாசிரியர். அவரது சிறுகதைகள் அதை மெய்ப்பிக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளன. "நித்ரவாரா சுரக்குடுக்கை' சிறுகதை பழைய வாழ்வில் ஆழ்ந்து கிடக்கும் மனதையும் அதன் சலனங்களையும் காட்டுவதாக உள்ளது. தொகுப்பில் இடம்பெற்றுள்ள "அச்சுவெல்ல மண்', "வெள்ளாவியில் மறையும் பொதி', "மயானத்தில் கேட்கும் பாடல்' சிறுகதைகள் வாசகனை மறு வாசிப்புக்கு உட்படுத்தும்.
அழைப்பின் நிலம் - உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜூல் அக்பர்; பக்.192; ரூ.70; வெளியீடு: இஸ்லாமிக் ஃபவுன்டேஷன் டிரஸ்ட், சென்னை. )044-26624401.
மதத்தில் முழுமை என்பது மதத்தின் கடமைகளை மட்டும் நிறைவேற்றுவது என்பதில்லை. அதன் கோட்பாடுகளை,கொள்கைகளை வாழ்நாள் முழுவதும் தன் செயல்களில் அமையும்படி ஒருவர் பார்த்துக் கொள்ளுதலே எனச் சொல்லும் நூல். இதன் அடிப்படையில் பெயரளவில் மட்டுமே இஸ்லாத்தைச் சேர்த்துக்கொண்டு நடைமுறை வாழ்க்கையில் கோட்பாடுகளை விட்டுவிடும் இஸ்லாமியர்களைச் சாடியுள்ளார் நூலாசிரியர். நூலின் எந்த இடத்திலும் தன் சொந்தக் கருத்தைப் புகுத்தாமல் திருக்குர்ஆனின் வசனத்தையே மேற்கோளாக வைத்து கருத்துக்களைச் சொல்வது சிறப்பு. இந்நூலைப் படிப்பவர்கள் தங்களின் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வார்கள் என்பது நிச்சயம்.
புறநானூறும் திருக்குறளும்-ஒப்பாய்வு; சரளா ராஜகோபாலன்; பக். 232, ரூ.150; ஒளிப் பதிப்பகம்,சென்னை. )044-24996611.
எட்டுத்தொகை நூலான புறநானூற்றுக்கும், பதினெண்கீழ்க்கணக்கு நூலான திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமையை விளக்கும் வகையில் ஆய்வுத்திறத்தோடு இந்நூல் அமைந்திருப்பது சிறப்பு. அறம், பொருள், இன்பம் என்ற அடிப்படையில் இரண்டு நூல்களுக்கும் இடையே உள்ள ஒற்றுமையை ஆசிரியர் தக்க உதாரணங்களோடு விளக்கியிருப்பது பாராட்டத்தக்க முயற்சி. குறிப்பாக "நீரின்றி அமையாது உலகு' என்று வான் சிறப்பை விளக்கும் திருவள்ளுவரின் கருத்தானது, புறநானூற்றில் "நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்...' என முதுமொழிக்காஞ்சித்துறையில் குடபுவலவியனார் கூறியதைச் சுட்டியிருப்பதைக் காணமுடிகிறது. இதேபோல கற்புநெறி, குழந்தை மொழி என புறநானூற்றுக்கும் திருக்குறளுக்கும் உள்ள ஒற்றுமைகளை நூலாசிரியர் தெள்ளத்தெளிவாக எடுத்துரைத்திருப்பது படிப்போர் சிந்தனைக்கு விருந்தாகும். இலக்கியத்தை நுண்மான் நுழைபுலத்தோடு கற்கவிரும்புவோருக்கு இந்நூல் மிகச்சிறந்த காலக்கண்ணாடி.
பயன் தரும் பச்சிலை வைத்தியம் - முத்துவேலு வைத்தியர்; பக்.160; ரூ.60; நர்மதா பதிப்பகம், சென்னை. )044-2433 6313.
பூக்கள், இலைகள், வேர்கள், காய்கள், கனிகள் போன்ற மூலிகைகளின் பல பாகங்களைக் கொண்டு பல்வேறுபட்ட நோய்களுக்கு அதை மருந்தாகப் பயன்படுத்தும் முறைகளை எளிய முறையில் விளக்கும் நூல். மருதாணி இலையை அரைத்து அதைப் பெண்களின் உள்ளங்கையை அலங்கரிக்கப் பயன்படுத்துபவர்களே அதிகம். ஆனால் ""மருதாணியின் வேர்ப்பட்டை தூளோடு கடைச் சரக்கான மிருதார்சிங் தூளைச் சேர்த்து ஒரு மணி நேரத்திற்குப் பின் பயன்படுத்தினால், நாள்பட்ட நீர் ஒழுகும் "எக்ஸிமா' என்னும் புண்களையும் இது குணமாக்கும்'' என்கிறார் நூலாசிரியர். அனைவர் வீட்டிலும் இருக்க வேண்டிய நூல்.
எழுத்துலகில் பொற்காலம் படைத்தவர் ஜெயகாந்தன்! - மு.பரமசிவம்; பக்.208; ரூ.100; மேகலா பதிப்பகம், சென்னை. )9380552788.
எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆரம்ப காலகட்டம் முதல் இன்றைய காலம் வரை அவர் எழுதியவை, எதிர் கொண்டவை என எல்லாவற்றையும் அலசியிருக்கிறார் நூலாசிரியர். "செüபாக்கியம்' என்ற இதழில் ஜெயகாந்தனின் முதல் சிறுகதை வெளியானது. கதையின் தலைப்பு "பிச்சைக்காரன்'. 1954-ல் வெளியான ஜெ.கே.வின் முதல் சிறுகதை தொகுதி "உதயம்'. அறுபதுகள் ஜெயகாந்தனின் சிறுகதை ராஜ்ஜியம். விபச்சாரிகள், பிச்சைக்காரர்கள், திருடர்கள், ரிக்ஷா ஓட்டுபவர்கள் என ஜெயகாந்தன் சித்திரித்த உலகம் வாசக நெஞ்சங்களைப் புரட்டிப் போட்டது. பிராமணீயத்தை ஆதரித்து எழுதுகிறார் என்று விமர்சனங்கள் எழுந்து அடங்கின. பின்னர் தமிழ் விமர்சகர்கள் பலரும் அவரைப் போற்றினார்கள். 70-களின் மையத்தில் வெளியான "ஜயஜயசங்கர' தொகுதி மீண்டும் ஜெயகாந்தனை விமர்சன மேடையில் அமர்த்தியது. "தமிழகத்தின் தேவை ஜயஜய சங்கர அல்ல- ஜயஜய பாட்டாளி' என்று எழுதினார் ஆர். நல்லகண்ணு. "மடமைவாதிகளின் மத்தியில் வீழ்ந்துவிட்ட ஒரு சிறந்த எழுத்தாளர் என்று ஜெயகாந்தனை மதிப்பிடுவதில் தவறு உண்டோ?' என்று எழுதினார் விமர்சகர் தி.க.சி. அனைத்தையும் கடந்து ஜெயகாந்தனின் எழுத்தாளுமையைப் புரிந்து கொள்ள உதவும் நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.