மாவீரர் சசிவர்ணத் தேவர்
சிவகங்கைச் சீமையை உருவாக்கிய மாவீரர் சசிவர்ணத் தேவர் (கி.பி.1710-1750) உண்மைச் சரித்திரம்- கே.வி.எஸ்.மருதுமோகன்- பக்.232; ரூ.180; வானதி பதிப்பகம், சென்னை-17; )044-2434 2810.
மாவீரர் சசிவர்ணத் தேவர் எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை தொகுத்துள்ள இந்த நூலாசிரியர் வரலாறு தெரியாதவர்கள் கூட எளிதில் புரியும் வகையில் சரித்திரச் சம்பவங்களை வரிசைப்படுத்தியிருப்பது வாசிப்பவர்களை ஆர்வம் கொள்ளச் செய்கிறது. அரசுரிமையைப் பெறுவதற்குக் கூட அறத்தின் வழிநின்று போராடி வென்றவராக சசிவர்ணத்தேவர் இருப்பதை, பல உண்மைச் சம்பவங்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நூலாசிரியர். தங்கக் காலணியை தலையில் சுமந்து, சேதுபதி மன்னருக்கு அவரது மகளின் தவறின் உண்மையை உணர வைத்ததன் மூலம் சசிவர்ணத் தேவர் வீரத்தில் மட்டுமல்ல, விவேகத்திலும் சிறந்து விளங்கியதை அறிய முடிகிறது.
சிவகங்கைச் சீமையை உருவாக்கிய சசிவர்ணத்தேவரை மையப்படுத்திய நூலின் ஆய்வானது, அக்கால கட்டத்தில் தமிழகத்தில் நிலவிய மன்னராட்சியின் அனைத்து அம்சங்களையும் சமூக வழிநின்று ஆராய்வதாகவும் அமைந்துள்ளது.
சிற்றரசர்களின் வரலாற்றை சங்கத் தமிழ் இலக்கியம் முதல் பக்தி இலக்கியங்கள் வரை மற்றும் அக்கால செப்பேடுகள் வழிநின்று ஆராய்ந்து உண்மையை எடுத்துக்காட்டியிருக்கிறார் நூலாசிரியர்.
சசிவர்ணத் தேவரின் தீரம், அறம், நிர்வாகம் என அனைத்தையும் நுண்மான் நுழைபுலத்தோடு ஆராய்ந்திருக்கும் நூலாசிரியர், அவரது கொலைக்கான காரணத்தையும் கூடுதலான தகவல் திரட்டி அலசி ஆராய்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.