மனித வளம்
மனித வளம் - ஆரா; பக்.64; ரூ.90; சிவகாமி புத்தகாலயம், காஞ்சிபுரம்- 601301; ✆ 9551648732.
'ஹெச்.ஆர்.' என்ற மனித வள மேலாண்மை என்ற நவீன சொல்லாடல் தொழில் துறையில் தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தத் துறையின் பரிணாம வளர்ச்சியை நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
'நாகரிக காலத்தை மனிதர்கள் வந்தடைய கடினமான பாதைகளைக் கடந்துள்ளனர். மிருகங்களை வேட்டையாடி, குடும்பம், தனிச் சொத்து என்று அரசக் கட்டுப்பாட்டுக்குள் வந்தனர்.
பின்னர், தங்களது உழைப்பு போக, பிறரின் உழைப்பு நாட வேண்டியபோது அடிமை முறை தோன்றியது. ஊதிய முறைக்கு மனிதர்கள் தள்ளப்பட்டவுடன், மரியாதைமிக்க தொழிலாளர் முறையாக இப்போது உருமாறி மரியாதைமிக்க மனிதனை வளமாகப் பார்க்கும் முறை இப்போது தோன்றியுள்ளது' என்றதொரு விளக்கத்தை நூலாசிரியர் முன்வைக்கிறார்.
உலக அளவில் மனித வள மேம்பாடுக்கு அடித்தளமிட்டது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என்பதை மறுக்க முடியாது.
இன்றைய ஊழியர்களுக்கு நிர்வாகங்களிடமிருந்து பல்வேறு சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால்,அடிமை முறையில் தொழிலாளர்கள் தேர்வு முறையும், அவர்கள் பட்ட இன்னல்களையும் வாசிக்கும்போது கண்களில் நீர் ததும்பும்.
இன்றைய தொழிலாளர்- நிர்வாகம் இடையே நல்லுறவு வித்திடும் வகையில் வெளிவந்துள்ள நூல், இரு தரப்பினரும் இணக்கமாகச் செயல்பட வேண்டியவற்றை அலசுகிறது.
ஊதியம், பயிற்சி, உறவு, சுகாதாரம், பாதுகாப்பு, திட்டங்கள், பொறுப்பு, மதிப்பீடு, ஆள்கள் தேர்வு உள்பட பலவற்றையும் அலசுகிறது.
தொழிற்சாலைகளில் அவசியம் இருக்க வேண்டியதொரு நூல் இது.