உலகப் பெருங்காப்பியங்கள்
உலகப் பெருங்காப்பியங்கள், எம்.அல்போன்ஸ், பக்.152, விலை ரூ.150, வனிதா பதிப்பகம், சென்னை- 17; ✆ 044-42070663.
சுமேரியாவில் 12 களிமண் பலகைகளில் வடிக்கப்பட்டிருந்த முதல் காப்பியமான கில்காமெஷ் காப்பியம், மாயன் இலக்கியம், வடமொழிக் காப்பியங்கள், கிரேக்க - லத்தீன் - ஆங்கிலக் காப்பியங்கள், தமிழ்க் காப்பியங்கள் என பல்வேறு காலங்களில் படைக்கப்பட்ட காப்பியங்களில் சிறந்தவற்றின் உருவாக்கம், சிறப்பு, சுவைகளை நூலாசிரியர் விளக்கியுள்ளார்.
காப்பியம் உருவான விதம், இடம், கருத்து, காலம், மையப்பொருள், வரிகள், பாடல்களின் எண்ணிக்கை, சந்தங்கள், மொழியமைப்பு, சமய அடையாளம், பாத்திரங்கள், இலக்கிய அடையாளம், இலக்கியத் திறனாய்வாளர்களின் கருத்து, மொழிபெயர்ப்பு என அனைத்தும் சுருக்கமாகக் கூறி விளக்கப்பட்டுள்ளது; அத்துடன் மூல நூல்கள், வழிநூல்களும் கூறப்பட்டுள்ளது.
ஹோமரின் இலியட்டும் ஒடிசியும் இரட்டைக் காப்பியங்கள்; அவை தொன்மத்தின் களங்கள் என்றும் தேசிய இனக் குழுவின் வாய்மொழிப் பாடல்களின் சாரம் என்றும் குறிப்பிடுகிறார். டாண்டேயின் தெய்வீக இன்பியல் காப்பியத்தின் மெய்யியல் கோட்பாடு திறம்பட எடுத்தாளப்பட்டுள்ளது.
நூலின் கடைசி ஆறு பகுதிகள் முழுவதும் தமிழ்க் காப்பியங்களாக உள்ளன. ஐம்பெரும் காப்பியங்களைப் பொதுவாகவும் இரட்டைக் காப்பியங்களை விரிவாகவும் விளக்குகிறார் நூலாசிரியர். கிரேக்க காப்பியங்களும் வட மொழிக் காப்பியங்களும் அரசர்களைத் தலைவர்களாக கொண்டிருக்கையில் தமிழ்க் காப்பியங்களான சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சாதாரணப் பெண்களையே தலைவராக கொண்டிருக்கின்றன. தமிழின் தொடக்கக் காப்பியப் படைப்பாளர்கள் மக்கள் சமூகம் சார்ந்து படைத்திருப்பது படைப்பு நிலை உயர்ச்சியை காட்டுகிறது.
தரமான தகவல்களோடு காப்பியங்களின் அனைத்து பரிமாணங்களையும் அறிமுகப்படுத்தியுள்ள இந்த நூலை காப்பியக் கருவூலம் எனக் கூறுவது பொருத்தமாக இருக்கும்.