சோமதேவர் இயற்றிய கதைக் கடல்
சோமதேவர் இயற்றிய கதைக் கடல் - முல்லை பி.எல். முத்தையா; பக். 632; ரூ.600; முல்லை பதிப்பகம், சென்னை 40; ✆9840358301.
ஆறாம் நூற்றாண்டில் குணாத்தியன் என்பவர் "பிருஹத்கதை' என்ற பெயரில் எழுதினார் என்றும் பின்னர் அந்த கதை வெவ்வேறு வடிவங்களில், பெயர்களில் உலா வந்தது என்றும் தெரிகிறது. பிருஹத்கதை இப்போது கிடைக்கப் பெறவில்லை. இதைத் தழுவித்தான் தமிழில் பெருங்கதை இயற்றப்பட்டது. பிரசித்தி பெற்ற உதயணன் கதையைக் கூறுவதுதான் பெருங்கதை.
பிருஹத்கதையை 17-ஆம் நூற்றாண்டில் சோமதேவ பட்டர், "கதா சரித் சாகரா' என்ற பெயரில் வடமொழியில் புதிய நடையில் இதை தொகுத்தார். சாகரம் என்றால் கடல். சம்ஸ்கிருதத்திலிருந்து 19-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலத்தில் பல தொகுதிகளாக மொழிபெயர்க்கப்பட்டது.
கதை, கிளைக் கதை, உள்கதை, கதைக்குள் கதை என்று இதன் நடை மிகவும் நூதனமானது. எல்லா கதைகளையும் மூலத்தில் உள்ளபடியே தமிழாக்கி தொகுத்தால் பல தொகுப்புகள் வெளியிட வேண்டும். இதற்கு முன்பும் சிலர் இதனை சுருக்கமாக தமிழாக்கம் செய்துள்ளனர்.
முல்லை முத்தையா சுவாரசியமாக 190 கதைகளை ஜனரஞ்சகமான முறையில் தொகுத்தளித்து இருக்கிறார். நயமான, எளிமையான நடை நூலின் சிறப்பு.
சம்ஸ்கிருத நூலான கதா சரித் சாகரத்தின் முக்கிய பகுதிகள் இந்த தமிழ்த் தொகுப்பில் உள்ளன. குடும்பக் கதைகள், அரசர்களின் கதைகள், மாயாஜால கதைகள், விலங்குகள் பறவைகளின் கதைகள் உள்ளிட்ட 9 பிரிவுகளாக நூலை புதுமையாக ஆசிரியர் தொகுத்ததே தனித்துவம்.
மனதுக்கு இன்பம் அளிக்கும் பொழுதுபோக்கு கதைகள் போல பல இருந்தாலும், எக்காலத்துக்குமான அறநெறிகளும் பொதிந்துள்ளன.
கதை சொல்வதிலும் கதை தொகுப்புகளிலும் இந்தியாவுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு. அதில் சோமதேவரின் கதைக் கடலுக்கு முக்கிய இடம் உண்டு. முல்லை முத்தையா தொகுத்துள்ள இந்த நூல் ஒவ்வொரு வீட்டிலும் கட்டாயம் இடம் பெற வேண்டியதாகும்.