சித்திரைப் பூக்கள் (சிறுகதைகள்)
சித்திரைப் பூக்கள் (சிறுகதைகள்) - எஸ்.ராமன்; பக். 112; ரூ.130; புஸ்தகா டிஜிட்டல் மீடியா (பி.) லிட்., பெங்களூரு- 560 076; ✆ 7418555884.
வங்கி உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எஸ்.ராமன் கிராமத்து வாழ்க்கையை இயற்கை எழிலோடு நகைச்சுவை கலந்து எழுதுவதில் சிறந்தவர். பல்வேறு இதழ்களில் பரிசு பெற்ற 12 சிறுகதைகளைத் தொகுத்து நூலாக்கியுள்ளார்.
'சித்திரைப் பூக்கள்' சிறுகதையில், மலையப்பனின் வீட்டில் வளரும் வேப்ப மரம் பக்கத்து வீட்டுக்குப் படர்ந்து செல்ல அந்த வீட்டின் உரிமையாளர் சோலை எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதற்கு இடையே மலையப்பன் மகன் வேம்புவும் சோலையின் மகள் மீனாவும் காதல் வயப்படுகின்றனர். இது நிறைவேறியதா? என்பது திரைப்படத்தில் வரும் சுவாரசியத்தைப் போலவே இருப்பது அருமை.
'அன்னபூரணி' கதையில் குருக்கள் சுவாமிநாதன் கரோனா ஊரடங்கின்போது வருவாய் இல்லாதது தொடர்பாக மனைவி சாவித்திரியுடனான உரையாடல் கண்ணீரை வரவழைக்கிறது. அன்றாட உணவுக்காக அந்த ஊர் பிரமுகர் பாலுவை நாடும்போது சிலைகளை மாற்ற முயற்சிப்பதற்கு தன்னை பயன்படுத்துவதை அறிந்து அங்கிருந்து வீட்டுக்கு வரும்போது, காத்திருக்கும் இளைஞர்கள் 'யூ டியூப்' சேனல் பேட்டிக்காக, அட்வான்ஸ் தொகை கொடுத்து செல்கின்றனர். சில பக்கங்களில் வாழ்க்கையின் எதார்த்தத்தை வெளிப்படுத்துகிறது.
அமெரிக்காவில் இருக்கும் தனது மகன் குப்புவிடம் இருக்க காத்தவராயன் விமான நிலையத்துக்குச் சென்று காத்திருப்பதும், பசு சினையாகியிருப்பதாக தகவல் கிடைத்ததால், தனக்கு பேத்தி பிறக்கப் போவதாகக் கூறி ஓடி வரும் 'காத்தவராயனின் பயணக் குறிப்பு' எனும் சிறுகதை அபாரம். சிறுகதைகள் ஒவ்வொரு அர்த்தத்தையும் எடுத்துரைக்கின்றன. இந்தக் கதைகளைப் படிக்கும்போது, இவரது பிற நூல்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.