மழையும் வெயிலும்...-தொகுப்பாசிரியர் மணிமாறன்; பக்.244; ரூ.150; சரஸ்வதி பப்ளிகேஷன்ஸ், சாத்தூர்-626 203, ✆ 94432 44633.
எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி நினைவாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளுக்கு வந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து ஒரு தொகுப்பாக வெளியிட்டு இருக்கிறார் தொகுப்பாசிரியர். இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் அனைத்தும் புதிதாக எழுத வந்தவர்கள் எழுதிய சிறுகதைகள்போல் தெரியவில்லை. அனைத்து சிறுகதைகளுமே தேர்ந்த எழுத்தாளர்களின் கைவண்ணத்தில் எழுதப்பட்டவை போன்று உள்ளன.
நமக்கு மத்தியில் வலம் வரும் சராசரி மனிதர்களின் உணர்வுகளைக் கொண்டு புனையப்பட்ட படைப்பாக அவை இருக்கின்றன. அன்பு, கோபம், இரக்கம், வெறுப்பு, சூது இப்படி பலவிதமான மன வடிவங்களின் வெளிப்பாட்டால் ஏற்படும் நிகழ்வுகளை நம் கண்முன் கொண்டு வந்து கதை மாந்தர்கள் தங்களைக் காண்பிக்கிறார்கள்.
ஒவ்வொரு கதையும் வெவ்வேறு கதைக்களம், அதில் பெரும்பாலும் மண் சார்ந்த வட்டார மொழி துணையுடன் உருப்பெற்று இருக்கின்றன. அனைத்துக் கதைகளுமே அறத்தை வெற்றி பெறச் செய்யும் விதமாக அமைந்திருக்கின்றன.
சமூக நீதி, ஒழுக்கம், பல்லுயிர் ஓம்புதல், குழந்தைகளின் உலகம், கிராமக் கோயில் திருவிழா என நமக்கு பல்வேறு விதமான சூழலையும், மண்வாசனையையும், வட்டார மொழியையும் வெளிப்படுத்தும் விதத்தில் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்திருக்கிறார் தொகுப்பாசிரியர். இந்தத் தொகுப்பு தமிழ் சிறுகதை உலகத்துக்கு புதிய வரவாக இருப்பினும் தவிர்க்க முடியாத ஒரு பங்களிப்பாகத்தான் பார்க்க முடிகிறது.
புதிதாக சிறுகதை எழுதுபவர்களுக்கும், சிறுகதை வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கும் நூலாசிரியர் செய்திருக்கும் இலக்கியப் பணி மிகவும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.