ஒளவைக் குறள் தெளிவுரை-சிவமல்லிகா; பக். 216; ரூ.225; மணிவாசகர் பதிப்பகம், சென்னை -600 021, ✆ 93805 30884.
வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது ஒளவைக் குறள். 'உயர் ஞான தரிசனம்' என்ற ஒரு பகுதியில் 10 குறட்பாக்கள் கூறப்படுகின்றன. மொத்தம் 310 குறட்பாக்களுக்கு விளக்கவுரை எழுதப்பட்ட நூல்.
இந்த நூலில் ஒளவைக் குறளுடன் திருமந்திரத்தை ஒப்பிட்டு அதன் ஒற்றுமை, வேற்றுமைகள் கூறப்பட்டுள்ளன. ஒளவையாரின் பெரும்பான்மையான குறட்பாக்களில் திருமூலரின் சாரம் மிகுந்து வழிகிறது.
வீட்டு நெறிப்பால் அதிகாரம் மனிதப் பிறப்பு ஏன், எதற்கு என்று கேள்வி எழுப்பி, உடம்பைக் களமாகக் கொண்டு செய்யும் நல்லனவற்றைக் கூறுகிறது. உலகப் பிறப்பு, உயிர் பிறப்பு, உடம்பின் ரகசியங்கள் எனப் பல்வேறு நுட்பமான கருத்துகளை விளக்குகிறது. அதில் ஒரு குறட்பா, "தருமம் பொருள் காமம் வீடெனும் நான்கு உருவத் தாலாய பயன்' என்று பிறவியின் நோக்கம் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு நெறிகளையும் கடைப்பிடித்து உதவ வேண்டும் என்பதே, உடம்பு எடுத்ததன் பயன் என்கிறது.
திருவருட்பால் அதிகாரத்தில் வீடுபேறுக்குரிய யோக நெறிகளில் செல்லக் கூடியவர்களுக்கு திருவருளால் கிடைக்கும் பயன்கள் கூறப்பட்டுள்ளன. இதில், ஒரு குறட்பா, "அஞ்சாலும் மாயா அறம் பொருள் இன்பமும் துஞ்சாதவர் துறக்கம் ஆறு' - அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களின் இச்சையை விடாதவர்களுக்கும், அறம், பொருள், இன்பம் என்ற முப்பொருளையும் கடைப்பிடிக்காதவர்களுக்கும் வீடுபேறு கிடைக்காது என்கிறது.
உயிரின் இயல்பு பற்றி கூறுவது 'தன்பால்'. இந்தப் பகுதியில் மானிடருக்கு சிவத்தை அடைவதற்குரிய வழிமுறைகளும், முயன்றால் அடையக்கூடியதே சிவம் என்பதையும், தன்னை அறியும் அதேநேரத்தில் சிவத்தையும் அறிந்துவிடும் ஆன்மா, அதிலிருந்து விலகி விடுமோ என்ற அச்சம் வேண்டாம் என்பதையும் விளக்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.