முகப்பு
ஆன்மிகம்

நல்லோர் மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவர்

  ஞான, தத்துவ, ஆன்மீக வித்தகர்களும், இறைநேசச் செல்வர்களுமான "வலிமார்கள்' ஒவ்வொரு ஊரிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவாகத்தான் "தர்காக்கள்' என்னும் அடக்க ஸ்தலங்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:06 PM
பகிர்:

  ஞான, தத்துவ, ஆன்மீக வித்தகர்களும், இறைநேசச் செல்வர்களுமான "வலிமார்கள்' ஒவ்வொரு ஊரிலும் இருந்திருக்கிறார்கள். அவர்களின் நினைவாகத்தான் "தர்காக்கள்' என்னும் அடக்க ஸ்தலங்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன.

  தென்னகத்தின் புகழ் பெற்ற திருத்தலங்களில் ஒன்று நாகூர் மாநகரம். இவ்வூர் தர்காவில் எழுந்தருளியிருக்கும் "மெய்ஞ்ஞானப் பேரொளி' செய்யது அப்துல் காதிர் ஷாஹுல் ஹமீது நாயகம், ""நாகூர் ஆண்டகை'' என்று நானில மக்களால் நாவாரப் போற்றப்பட்டவர். அவர் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடமே நாகூர் தர்கா ஆகும்.

  இங்கு அதிகாலைத் தொழுகைக்கான பாங்கொலி காற்றில் கலந்து வருகிறது. தொழுகை முடிந்தபின் "பெரிய மினாரா' அருகே உள்ள மண்டபத்திலிருந்து "ஷெனாய்' இசை தவழ்ந்து வருகிறது. இந்த இன்னிசை மொகலாயர் காலத்து அரசவையை நினைவூட்டுகிறது. ஷெனாய் இசையையொட்டி நாகஸ்வரமும் இசைக்கப்படுகிறது.

  இந்தியாவில் இது போன்று தொழுகைக்கு அழைக்கும் பாங்கொலியும், "ஷெனாய்-நாகஸ்வரமும்' ஒருங்கே ஒலிக்கும் ஒரே இடம் நாகூர் நன்னகர்தான்.

  இங்கு மணிக்கு ஒரு முறை அதிரும் வெடியோசையைக் கேட்டு மினாராக்களின் மாடங்களிலிருந்து மணிப்புறாக்கள் கூட்டம் கூட்டமாகப் பறந்து செல்லும் காட்சி மனதை இன்பத்தில் ஆழ்த்தும். இந்த ஒலிகளோடு பக்தர்களின் பெருமித ஆரவாரமும் சேர்ந்து கொள்கிறது. இதனால், நாள் முழுவதும் விழாக் கோலம்தான்.

  நாகை மாவட்டத்தில் வங்கக் கடல் தன் அலைக்கரங்களால் நீராட்டும் நெடிய ஊர்தான் "நாகூர்'. இது சமரசம் உலாவும் இடம்! சமய, கலாசாரங்கள் சங்கமிக்கும் இடம்!

  நாகூர் தர்காவில் நிமிர்ந்து நெடிதுயர்ந்து நிற்கும் வெள்ளை மினாராக்கள் நம்மைக் கவரும். இந்து-முஸ்லீம் கட்டடக்கலை நுட்பங்களின் கலவையாக இவை நிற்கின்றன. தஞ்சை நாயக்க மன்னரின் செல்வாக்கும், நவாபின் வண்ணமும் தர்காவின் நிர்மாணத்தில், அமைப்பில் இரண்டறக் கலந்திருக்கின்றன.

  தர்காவிற்கு அலங்கார வாசல், தலைமாட்டு வாசல், கிழக்கு வாசல், கால்மாட்டு வாசல் என நான்கு வாசல்கள் உண்டு. அலங்கார வாசல், கடைகள் நிறைந்த கலகலப்பான இடம்.

  தர்காவின் உட்பகுதியில் புறாக்கூட்டம் தன்னிச்சையாகப் பறந்து திரிந்து கொண்டிருக்கும். சிலர் புறாக்களை விலைக்கு வாங்கி, தமது வேண்டுதலை நிறைவேற்றப் பறக்க விடுகிறார்கள்.

  அரண்மனைப் போன்று விசாலமான தர்காவின் உள் முற்றத்தை அடைந்ததும், எதிரில் தெரிகிறது ஆண்டகையின் அடக்கத் தலம்.

  நாகூர் தர்காவில் சாதி-சமய வேறுபாடின்றி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி நல்லருள் நாடுகின்றனர். எனவே நாகூர் நன்னகர், சமய நல்லிணக்கத்திற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

  ஐநூறு ஆண்டுகளுக்கு முன் உத்திரபிரதேசத்தில் மாணிக்பூரில் (ஹிஜ்ரி 910-ஆம் ஆண்டு) உதித்த நாகூர் ஆண்டகை, கருவிலிருந்து கல்லறை வரை பல அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறார். அவருக்கு ஐந்து வயது பூர்த்தியடைவதற்குள் "குர்ஆன்' முழுவதையும் மனனம் செய்துவிட்டார். எட்டு வயதை எட்டுவதற்குள் சகல மார்க்கக் கலைகளையும், உலகக் கல்வியையும் கற்று, மெய்ஞ்ஞானச் சிந்தனைகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டார். பதினெட்டு வயதில் ஞான தரிசனம் பெற்று அல்லாஹ்வை மறைவின்றி அறிய ஒரு மகானைத் தேடி, குவாலியர் சென்றார். முஹம்மது கௌது குவாலீரி நாயகத்திடம் சீடராகப் பத்தாண்டுகள் தங்கி ஞானத்தைப் பெற்றார்.

  தம் குரு மகானின் கட்டளைக்கு இணங்க நானூற்று நான்கு சீடர்களுடன் தென் இந்தியாவில் திக்கெட்டும் சென்று ஞானத்தையும், தர்மத்தையும் பரப்பினார்.

  கேரளத்தில் சிறிது நாட்கள் தங்கி, பின் சீடர்களுடன் தமிழ்நாட்டில் காயல்பட்டணம், கீழக்கரை, மேலப்பாளையம், தென்காசி வழியாகத் தஞ்சாவூருக்கு வந்தார்.

  நாகூர் ஆண்டகை மற்றும் அவர் கூட்டத்தார் தமிழகத்தில் நாலா திக்குகளிலும் சுற்றி, புனித இஸ்லாத்தின் ஏகத்துவத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்தினர். பின்னர் தஞ்சை மன்னனின் அழைப்பை ஏற்று, அரண்மனை சென்று, மன்னர் சேவப்ப நாயக்கரின் பிள்ளை இல்லாத குறையையும் நீக்கினர்.

  மனம் மகிழ்ந்த மன்னர் பரிசில்களை ஆண்டகையின் பாதங்களில் வைத்தார். அதற்கு அவர், ""மன்னவரே! இப்பரிசில்கள் எனக்கும், என் கூட்டத்தாருக்கும் வேண்டாம். ஆனால், நான் உமது எல்லையிலேயே எங்கேனும் நிரந்தரமாகத் தங்கிட நேருமோ என எண்ணுகின்றேன். அவ்வாறிருப்பின் தங்குவதற்கு ஒரு சிறிது நிலம் தந்தால் போதும்'' என்றார்.

  நாகூர் ஆண்டகை தம் திருக்கூட்டத்தாரோடு நாகைக்கு அடுத்த நாகூர் கடற்கரையில் நிரந்தரமாய் தங்கிடவே, விவரம் அறிந்த தஞ்சை மன்னர் படையுடன் வந்து பணிந்தார்;, ஆண்டகை தங்குவதற்கும், தவம் புரிவதற்கும் வசதியாக கடற்கரையை ஒட்டி சுமார் முப்பது வேலி நிலத்தைக் காணிக்கையாக்கினார்.

  தஞ்சையை பின்பு ஆட்சி புரிந்து வந்த மன்னர் பிரதாப்சிங்கும் தம் மனைவியோடு நாகூர் நன்னகர் வந்து ஆண்டகை அவர்களிடம், ""எனக்குப் பிறகு இந்தத் தரணியைக் கட்டி ஆள மகன் பிறந்தால், இந்தத் தர்காவிலேயே பெரிய மினாராவை நான் கட்டித் தருகிறேன்'' என்று உணர்ச்சி வசப்பட்டு வேண்டினார். அவ்வாறே அனைத்தும் நடந்தது.

  நாகூர் தர்காவிற்கு அழகூட்டும் ஐந்து மினாராக்களும் ஐவேறு அன்பர்களால் கட்டப்பட்டதாகும். (1) 77 அடி உயரமுள்ள "சாஹிபு மினாரா'வை செஞ்சி இப்ராஹீம்கான் என்பவரும், (2) 93 1/2 அடி உயரமுள்ள "தலைமாட்டு மினாரா'வை நாகை நல்ல செய்யிது மரைக்காயர் என்பவரும் (3) 93 1/4 அடி உயரமுள்ள "முதுபக் மினாரா'வை பரங்கிப்பேட்டை நீதிபதி தாவூத்கான் என்பவரும் (5) 131 அடி உயரமுள்ள "பெரிய மினாரா'வை தஞ்சை மன்னர் பிரதாப் சிங்கும் கட்டித் தந்துள்ளனர். இது நாகூரின் தனிச் சிறப்பு ஆகும்.

  தஞ்சை மன்னர் சரபோஜி, அந்த மினாராக்களில் வந்து தங்குகின்ற புறாக்களுக்கு உணவு வழங்க, நாகை மாவட்ட திட்டச்சேரி-நரிமணம் பகுதியில் கிராமம் ஒன்றையே தானமாக அளித்தார். அந்தக் கிராமம் "புறாக் கிராமம்' என்று அழைக்கப்படுகிறது.

  நாகூர் ஆண்டகை, 28 ஆண்டுகள் நாகூர் நன்னகரில் தங்கியிருந்து சன்மார்க்க சேவை செய்து மறைந்த பின், கி.பி. 1558ல் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார். இதன் காரணமாக இவ்வூர் தனிச் சிறப்புப் பெற்று விளங்குகிறது.

  கடந்த திங்களன்று வருடாந்திர கந்தூரி திருவிழா நாகூரில் தொடங்கப்பட்டது. இத்திருவிழாவின் முக்கிய அங்கமான சந்தனக்கூடு நகர்வலம் ஜூன் 3ம் தேதியன்று நடைபெறும். ஜூன் 7ம் தேதியன்று இத்திருவிழா நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.