நம்மாழ்வார் திருநெல்வேலி தாமிரபரணிக் கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் காரியார் மற்றும் நங்கைக்கு மகனாகப் பிறந்தார். இவர் பிறப்பே, ஒரு அதிசய பிறப்பாகும். கடவுள் இருக்கும் இடத்தில் அதிசயம் நிகழாமல் இருந்தால் தான் அதிசயம். கடவுளின் அவதாரங்களாக, அவதரித்த ஆழ்வார்கள் வாழ்வில் அதிசயம் நிகழ்வது சகஜம் தானே.
அப்படி நம்மாழ்வார் வாழ்வில் என்ன தான் அதிசயம் நிகழ்ந்தது...பார்ப்போம்
நம்மாழ்வார் பிறந்த கணம் முதல் ஒருமுறை கூட அழவில்லையாம், உணவும் உட்கொள்ளவில்லையாம். இதனால் கலக்கமடைந்த அவர்தம் பெற்றோர் அவரைத் திருக்குருகூரில் உள்ள ஆதிநாதர் திருக்கோயில் உள்ள இறைவனின் திருவடிகளில் சமர்ப்பித்துவிட்டனர். இயல்பான நிலையில் இருந்து மாறிப் பிறந்ததினால் அக்குழந்தையை மாறன் என்று பெயர் சூட்டினர். அதன்பிறகு, அக்குழந்தை தவழ்ந்து சென்று, அங்கிருந்த புளியமரப் பொந்தில் தியான நிலையிலேயே அமர்ந்து கொண்டது. பதினாறு ஆண்டு காலம் நம்மாழ்வார் இந்த மோன நிலையிலேயே தான் இருந்தார்.
அதன் பிறகு வடநாட்டில் அதாவது அயோத்தியில் மதுர கவியாழ்வார் இவரும் நம் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரே. அவர் தங்கியிருந்த இருக்கையில் இருந்து ஒரு புதுவிதமான பேரொளியைக் கண்டார். அவ்வொளி, தென்திசையில் இருந்து வருகிறது என்பதை அறிந்து, தென்னகத்தை நோக்கிப் பயணித்தார். அவர், தமிழ்நாட்டிலுள்ள ஸ்ரீரங்கத்திலுள்ள கோயிலில் இருந்து அந்த ஒளி வருகிறது என்று எண்ணி, மதுரகவியாழ்வார், திருவரங்கத்தை அடைந்தார். ஆனால், அந்த ஒளி மேலும் தென்திசையில் இருந்து வந்தது. எனவே, அவ்வொளி வந்த திசையை நோக்கிச் சென்ற போது, அது நம்மாழ்வார் வீற்றிருந்த புளியமரத்தை அவருக்குக் காட்டியது. வயோதிகரான மதுர கவியாழ்வார், அச்சிறுவனைப் பார்த்த மாத்திரத்திலே, அவனை இறைவனின் அவதாரமாகக் கண்டுவிட்டார். அவர், நம்மாழ்வாரைப் பேச வைப்பதற்காக, அவரிடத்தில் இவர் ஒரு புதிர் போட்டார். அந்தப் புதிர் என்னவென்றால்,
செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால்,
எதைத் தின்று? எங்கே கிடக்கும்?
இக்கேள்வியைக் கேட்டவுடன், நம்மாழ்வார், முதன் முறையாகத் தன் திருவாய் திறந்து, விடை பகன்றார். "அதைத் தின்று; அங்கே கிடக்கும். அதாவது, செத்தது என்பது நம் உடல்; சிறியது என்பது உயிர். உயிரானது உடலினுள் இருக்கும் பொழுது அதற்கென்று தனியான இன்பம், துன்பம் எதுவும் கிடையாது. உடல் நொந்தால், உயிரும் நோகும், உடல் இன்புற்றால், உயிரும் அப்படியே இன்புறும். அதனால், உயிரானது உடலின் இன்ப, துன்பங்களைத் தின்று, அங்கேயே இருக்கும்" என்று அந்த உயிர் உண்மையை உணர்கிறதோ, அன்று அது இறைவனைப் பற்றிய எண்ணங்களையே உணவாக உண்டு, அவரது திருவடி நிழலிலே நீங்கா நிலைத்துவிடும்.
இதுவே, அந்த புதிரில் பொதிந்திருந்த பொருள். அழகாக இரண்டே வார்த்தையில, தெள்ளத் தெளிவாக தெளிய வைத்தார் நம்மாழ்வார். இந்தப் பதிலை கேட்டதும், மதுரகவியாழ்வாருக்கு, உச்சி குளிர்ந்து, உண்மை விளங்கிப் போனது. அந்த பதிலால் ஈர்க்கப்பட்ட மதுரகவியாழ்வார், அந்த கணமே நம்மாழ்வாரின் திருப்பாதத்தில் விழுந்து வணங்கி, என்னைத் தங்கள் சீடனாக ஏற்று, இப்பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடக்க அருள் புரிவாய், ஐயனே என்று வேண்டினார்.
நம்மாழ்வாரும், மதுரகவியாழ்வாரைத் தன் சீடனாக ஏற்று அருள் புரிந்தார். அது மட்டுமல்லாது, நம்மாழ்வார் பாடும் பாசுரங்களை எல்லாம் ஏட்டுச்சுவடியில் எழுதியவரும், அதை மதுரமான இசையில் பாடியவரும் மதுரகவியாழ்வாரே. நம்மாழ்வார், திருவாய் திறந்து பாசுரங்களை எல்லாம் பாடத்துவங்கின போது, மகாவிஷ்ணு, அன்னை லட்சுமி தேவியுடன், தன் கருட வாகனத்தில் காட்சியளித்தனர். அது மட்டுமல்லாமல், திருமாலின் திவ்ய தேசங்கள் அனைத்தும் அவர் மனக்கண்ணில் தோன்றின.
என்னே ஒரு மகிமை. அவரின் திருநட்சத்திரமான இன்று நம்மாழ்வாரை நினைவு கூறுவோம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.